மழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாகக் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் 108.30 அடியாக இருந்தது. ஆனால் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக நேற்று அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 131.30 அடியாக உயர்ந்தது. அதுபோன்று சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 142.90/156 அடியாக உயர்ந்துள்ளது.
118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74 அடியாக உயர்ந்துள்ளது.
அதுபோன்று தென்காசி மாவட்டத்திலுள்ள ராமநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணைகள் நிரம்பி வருவதால் தாமிரபரணி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் மாவட்டமே வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. களியல் உள்ளிட்ட குமரி மலை கிராமங்களில் மழை வெள்ளம் காரணமாகச் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக, களியல், பேச்சிப்பாறை, மழபாடி தீக்குறிச்சி, மங்காடு சிதறால் உள்பட 23 கிராமங்களில் மழை நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மழை அதிகமாகப் பெய்து வரும் நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நேற்று முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
அதில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள் / டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.




