ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனது டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரணங்கனக்கான நுகர்வோர் பாதுகாப்பு வழக்குகள் நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவிலும்,கனடாவிலும் பேபி பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்தது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் டால்க் பேபி பவுடரில் ‘ஆஸ்பெடாஸ்’ என்ற கனிம பொருள் இருப்பதாகவும் அதனால் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வந்ததாகவும் இந்த நிறுவனத்தின் மீது 34,000 வழக்குகள் பதிவாகியது.இருப்பினும் தங்கள் பேபி பவுடரால் எந்த பாதிப்பும் இல்லை என நிறுவனம் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: டால்க் அடிப்படையில் இருந்து சோளமாவு அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிக்கப்படும். அனைத்து சோளமாவு அடிப்படையிலான பேபி பவுடர் போர்ட் போலியோவிற்கு மாறுவதற்கான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இதன் காரணமாக ஜான்சன் & ஜான்சன் பவுடர் 2023ல் உலகளவில் நிறுத்தப்படும். மேலும், எங்கள் பவுடரில் அஸ்பெடாஸ் எனும் வேதிப்பொருள் இல்லை என்றும் புற்றுநோய் ஏற்படாது என்றும் உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள் மூலம் உறுதிப்படுத்துவோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.