பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல விரும்பும் பொதுமக்கள் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை (12.09.2022) முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி பயணிக்க விரும்புபவர்கள் நாளை ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை மறுநாள் (13.09.2022) முன்பதிவு செய்யலாம். ஜனவரி 12ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் 14ம் தேதியும் (14.09.2022), ஜனவரி 13ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 15ம் தேதியும் (15.09.2022) டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதேபோல், ஜனவரி 14ம் தேதி பயணம் செய்பவர்கள் வருகிற 16ம் தேதியும் (16.09.2022), பொங்கல் அன்று பயணிப்பவர்கள் (ஜனவரி 15) வருகிற 17ம் தேதியும் (17.09.2022) முன்பதிவு செய்யலாம். ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். எனவே, பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொண்டு பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.