காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் கொண்டாட, அவரது நெருங்கிய பெண் நண்பர்கள், ‘ஸ்பின்ஸ்டர் பார்ட்டி’ என்ற பிரம்மாண்ட விழாவை சமீபத்தில் அவரது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். புகைப்படங்களில் தேவதையாகக் காட்சியளிக்கிறார் நம் காஜல்.
தெற்கு மற்றும் பாலிவுட்டில் கலக்கிவரும் காஜல், கவுதம் கிட்ச்லு என்ற தொழிலதிபரை அக்டோபர் 30 அன்று மும்பையில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஊரடங்கிற்குப் பிறகு மும்பையில் நடைபெறும் முதல் பிரபல திருமணமாக இது இருக்கப்போகிறது.
காஜல் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இன்று அதை உறுதிப்படுத்தினார். “அக்டோபர் 30, 2020 அன்று, மும்பையில், எங்கள் குடும்பங்கள் சூழ ஒரு சிறிய தனியார் விழாவில், நான் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொள்கிறேன் என்பதைப் பகிர்ந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நாங்கள் ஒன்றாக எங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம், நீங்கள் அனைவரும் மனதால் எங்களுடன் இருப்பீர்கள் என்பதை அறிவோம். பல ஆண்டுகளாக நீங்கள் என் மீது பொழிந்த அனைத்து அன்பிற்கும் நன்றி, இந்த நம்பமுடியாத புதிய பயணத்தை நாங்கள் மேற்கொள்ளும்போது உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறோம், “காஜல் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
காஜலும் கவுதமும் பொதுவான நண்பர் மூலம் ஒருவருக்கொருவர் சந்தித்ததாக கூறப்படுகிறது, அது நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் என்று கூறுகிறார்கள். கவுதம் கிட்ச்லு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர், உள்துறை வடிவமைப்பாளர் மற்றும் வடிவமைப்பு ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது