கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கோவை மாநகர காவல் உதவி ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் 12ம் வகுப்பு மாணவி ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அந்த மாணவி முன்னாள் படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அப்பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்ட அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மாணவியிடம் இந்த தகவல்கள் குறித்து பெற்றோரிடம் சொல்லக் கூடாது என வற்புறுத்தியுள்ளார். பெற்றோருக்கு தெரியாமல் கவுன்சிலிங்கும் மாணவிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கோவை வடக்கு பகுதி துணை கமிஷனர் ஜெயசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த வழக்கில் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாணவி எழுதிய ஒரு துண்டு சீட்டு கிடைத்துள்ளது. அதில் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவி மரணத்தில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டு இருக்கிறார்களா என்ற விசாரணையானது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து தெரிந்தும் காவல்துறைக்கு தகவல் அளிக்காத காரணத்தினால் அப்பள்ளியின் முதல்வரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.மேலும் மாணவியின் உயிர் இழப்பு குறித்து தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.
கடிதத்தில் மாணவி குறிப்பிட்ட சக தோழிகளின் தாத்தா மற்றும் அப்பா யார் வேறு யார் யாரெல்லாம் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தனர் என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.