திருவாரூரில் மின்கட்டணத்திற்கு எதிராக தடையினை மீறி போராட்டம் நடத்திய திமுகவினை சேர்ந்த 1050 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா காலக்கட்டத்தில் ஏற்கனவே மக்கள் வருமானமின்றி தவித்து வரக்கூடிய நிலையில் இந்த மின்கட்டண உயர்வு என்பது தேவையற்ற ஒன்று எனவும், எடப்பாடி அரசு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி மின் கட்டண உயர்விற்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே கோரிக்கையினை வலியுறுத்தி திருவாரூரிலும் 76 இடங்களில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து தடையினை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முறையான அனுமதி பெறாமல் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது போன்ற 3 பிரிவுகளின் கீழ் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் உட்பட 1050 திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது ஏழை, எளிய மக்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.