கீழடியின் அகழாய்வு அறிக்கை முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கீழடி அகழாய்வு
கீழடி அகழாய்வுப் பணிகள் முடிவுகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவதில் செய்யப்படும் தாமதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒருகட்ட அகழாய்வு அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் மூத்தக்குடி தமிழ்க்குடிதான் என்பதற்கு இலக்கிய ரீதியாக அதற்கான ஆதாரங்கள் இருந்தாலும் கூட, அதை நிரூபிப்பதற்குத் தேவையான தொல்லியல் ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. அதுகுறித்த ஏக்கத்திற்கு கீழடி அகழாய்வு முடிவு கட்டும் என்பதுதான் உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு.
தாமதம்
2019 ஆம் ஆண்டில் நிறைவடைந்த ஐந்தாம் கட்ட அகழாய்வின் முடிவுகள், நடப்பாண்டில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆனால், 2015 முதல் 2017 வரை மத்திய அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட முதல் 3 கட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கைகள் 5 ஆண்டுகளாகியும் கூட வெளியிடப்படாததன் மர்மம் தான் இன்னும் விளங்கவில்லை.
வெளியிட வேண்டும்
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வுகளின் அறிக்கைகளை வெளியிடுவதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்படுவதைப் பார்க்கும்போது தமிழர் நாகரிகத்தின் தொன்மை, தொல்லியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுவதைத் தடுக்க சதித் திட்டம் உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
எனவே, கீழடியின் முதல் 3 அகழாய்வுகளின் அறிக்கைகளை, இனியும் தாமதிக்காமல், விரைந்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.