இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் 9 மாத மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சாப்ட்வேர் இன்ஜினியரை மும்பை போலீசார் ஹைதராபாத்தில் கைது செய்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது. குறிப்பாக பந்து வீச்சாளர் முகம்மது ஷமியை மத ரீதியாக பலர் விமர்சித்தனர். இதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனவும் அது கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், மும்பை சைபர் கிரைம் போலீசார், குற்றவாளியை ஹைதராபாத்தில் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இந்த நபர் சாப்ட்வேர் இன்ஜீனியர் ராம்நாகேஷ் அக்குபதினி என்பதும், இவர் உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தின் செயலியில் பணியாற்றியவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவரை தற்போது மும்பைக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர். முன்னதாக பாகிஸ்தானைச் சேர்ந்த யாரோதான் இந்த மிரட்டலை விடுத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் அந்த நபர் இந்திய டிவிட்டர் ஹேன்டிலை தான் பயன்படுத்தினார் என்றும் அவர் ஒரு பாகிஸ்தானியரை போல காட்டிக்கொள்ள எத்தனித்தார் என்று தெரிய வந்தது.விசாரணையில் தற்போது குற்றவாளி தெலங்கானாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.