
வீடுகளில் பொருத்தப்பட உள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு நுகர்வோரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன. இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும். உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய “ஸ்டேடிக்” என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக ‘சர்வர்’ உடன் இணைக்கப்படும்.
இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்’ மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதுவும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் . அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கான கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
இதுகுறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. மின்வாரிய அதிகாரிகள் இந்த ஸ்மார்ட் திட்டத்தை பற்றி சொல்லும்போது, வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம், 2 மாதங்களுக்குஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. இதற்காக, மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மீட்டரில் பதிவான மின் பயன்பாட்டு அளவை கணக்கு எடுக்கின்றனர். சில ஊழியர்கள் தாமதமாக கணக்கெடுப்பதால் குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆளில்லாமல் துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்தது.
இதற்கான சோதனை முயற்சியாக சென்னை தி.நகரில் 1.42 லட்சம் மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மின்கணக்கு எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது, தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைப்பு, பராமரிப்பது ஆகிய பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஒரு மீட்டரை பொருத்த ரூ.6 ஆயிரம் வரை செலவிட மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதைவிட குறைந்த செலவில் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். இதற்காக நுகர்வோரிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. 3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.