தமிழக மலைவாழ் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திகளை சுட்டிக் காட்டி, அதில் மலைவாழ் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பழங்குடியின குழந்தைகள் வேறு வேலைக்கு செல்வதாக சுட்டிக்காட்டினர்.
அப்போது, குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், அரசு தொடர்ந்து நான்கு மாதம் இலவச அரிசி மற்றும் 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும், ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். அதோடு, நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.