தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கி வீட்டில் சேர்க்கவேண்டும் என்பது பலரின் ஆர்வமான விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துவரும் நிலையில் பலரும் கடைகளுக்கு சென்று நகைகளை வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் நகைகள் எதுவும் தேவையில்லை, முகக்கவசம் தான் முக்கியம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.
குறிப்பாக தற்போது பல்வேறு திருமணம் போன்ற நிகழ்வுகளில் மணமக்கள் முகக்கவசத்தினை மாற்றிக்கொள்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவந்தது. இந்த சூழலில் தான் இது போன்று ஆர்வம் உள்ள மக்களுக்காக கோவையைச்சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற பொற்கொல்லர் , வித்தியாசமான முறையில் எதாவது செய்ய வேண்டும் என்ற நினைத்துள்ளார். அதன்படி வடமாநிலங்களில் விலையுயர்ந்த மாஸ்க் தயாரிப்பது போல் கோவையில் தங்கம் மற்றும் வெள்ளயிலான மாஸ்க்குளை செய்து அசத்தி வருகிறார்.
தங்கம் மற்றும் வெள்ளி நூலிழையை வைத்து அந்த மாஸ்க் தயாரிக்கப்பட்டுள்ளதால், துணிகளால் செய்யப்பட்ட மாஸ்க் போலவே வளைந்துகொடுக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இவர் தயாரித்துள்ள தங்க மாஸ்க் 2.74 லட்சம் ரூபாய் எனவும் வெள்ளி மாஸ்க் 15 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற மாஸ்க்கினை சாதாரண மக்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள் என்றும் ஆனால் திருமணம் போன்ற நிகழ்விற்கு இந்த மாஸ்க்கினை வாங்கி பயன்படுத்தலாம் என தெரிவிக்கிறார் கோவையயைச்சேர்ந்த பொற்கொல்லர். மேலும் இதுவரை வடமாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்டர் வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் எளிமையான முறையில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது என்று கூறப்பட்டுவரும் இந்த நேரத்தில், இது போன்ற தங்கம் மற்றும் வெள்ளியிலான மாஸ்க் உபயோகம் தேவையா? என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்தாக உள்ளது. இருந்த போதும் தங்கம் மற்றும் வெள்ளியினை பயன்படுத்தி நுணக்கமான முறையில் பொற்கொல்லர் செய்த பணி பாராட்டுதலுக்குரியது என்றும் தெரிவித்து வருகின்றனர்.