சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 6 அடுக்கு பார்க்கிங் வசதி கடந்த 4-ந்தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு வாகனங்கள் நுழையும்போது எவ்வளவு நேரம் உள்ளே இருக்கின்றன என்பதை கணக்கிடுவதற்காக டோக்கன்கள் தரப்படுகின்றன.
மீண்டும் வாகனங்கள் வெளியேறும்போது எவ்வளவு நேரம் உள்ளே இருந்தது என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. முதல் 10 நிமிடங்கள் வாகனங்களுக்கு இலவசமாகவும் 10 நிமிடங்களுக்கு மேலே உள்ளே இருக்கும் வாகனங்களுக்கு ரூ.75 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மழைக்காலமாக இருப்பதால் விமானங்களை தவறவிடக்கூடாது என்பதற்காக பயணிகள் முன்கூட்டியே வந்துவிட்டதால் ஏராளமான வாகனங்கள் வந்தன. கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றதால் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள கட்டண சாவடியில் இருந்து உள்நாட்டு புறப்பாடு முனையம் வரைக்கும் வாகனங்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
கட்டணம் வசூலிக்கும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றதாகவும் பணிகளை விரைவுபடுத்த கூடுதலாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.