உதகையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதோடு அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதன் தாக்கம் நீலகிரியையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக உதகையில் இன்று காலை முதலே பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக டிசம்பர் மாதத்தில் உதகையில் பனிப்பொழிவு ஏற்படும். இந்த நிலையில் தற்போது மாண்டோஸ் புயலின் காரணமாக அவ்வப்போது சாரல் மழையாகவும் பெருமழையாகவும் பெய்து வருகிறது. பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புயலின் காரணமாக மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 283 அபாயகராமான பகுதிகளில் 42 குழுக்கள் மீட்பு பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.