நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது – சுகாதாரத்துறை தகவல்
இதுவரை புறநோயாளிகள் 17,459 பேரும் உள் நோயாளிகளாக 1421 பேர் இந்த மையம் மூலம் பயன்பெற்றுள்ளனர்
நட்புடன் உங்களோடு தொலைபேசி வழி மனநல சேவையினை 14416 அல்லது 104 ஆகிய எண்களை மூலம் பெறலாம்.
தமிழகத்தில் போதைப்பழக்கத்தை தடுப்பதில் மாநில அரசுகளும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. அத்துடன் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்டு, சமூகத்தில் நலமுடன் வாழ தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்க
அரியலூர், தருமபுரி, ஈரோடு, திருவாரூர், கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் ரூ.15.81 கோடி செலவில் “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் 25 இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தற்போது மக்களிடயே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ஒவ்வொரு மையத்திற்கும் மனநல மருத்துவர் தலைமையில், ஆற்றுப்படுத்துநர், சமூகப் பணியாளர், செவிலியர், பாதுகாவலர், மருத்துவமனை பணியாளர், துப்புரவு பணியாளர் என ஆறு மனநல மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைத்து மையங்களிலும் ஒரே வகையில் சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக ‘நிலையான செயல் நடைமுறைகள்’ வரையறுக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்படுகிறது.

இதுவரை புறநோயாளிகள் 17,459 பேரும் உள் நோயாளிகளாக 1421 பேர் இந்த மையம் மூலம் பயன்பெற்றுள்ளனர். மேலும், இந்த மையங்கள் மருத்துவகல்லூரிகளுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளதால் அவசர மருத்துவ சேவையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.