நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகள் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கின்றன எனக் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எது அரைவேக்காட்டுத் தனம் என கேள்வி எழுப்பி அதற்குப் பதிலளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் திரு. ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல. “அரைவேக்காட்டுத் தனமாக” இருக்கிறதாம் அவருக்கு. அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா திரு. ஸ்டாலின் அவர்களே?

ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்! தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே- இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே? மீத்தேன் – ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப் படுத்தவில்லை!

நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத பொம்மை முதலமைச்சர்! “நாட்டில் மும்மாரி பொழிகிறது- எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள்” என்று மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை! நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன?
இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்? எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் “பெட்டி” மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம். உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா?
ஆக, “ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர்” என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார் திரு.ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.