நான் ஒருநாள் என்னோட அப்பாகிட்ட, எனக்கு வாழவே பிடிக்கலப்பா.. எல்லாரும் பொய் சொல்ரங்க, ஏமாத்துறாங்க, கூடவே இருந்துக்கிட்டுத் துரோகம் பண்றாங்க, யாரும் நேர்மையாவே இருக்க மாட்ராங்க..ச்சே!ஏன் எல்லாரும் இவ்வளவு கேவலமா இருக்காங்க? அப்படி இப்படினு பயங்கரமாகப் புலம்பினேன்.
அப்பதான் எங்கப்பா இந்த எலிக் கதையை என்கிட்ட சொன்னாங்க, அந்த எலிக் கதையைக் கேட்டதுக்கு அப்புறம்தான் எனக்கு வாழ்க்கைனா என்ன? ஏன் எல்லாரும் அப்படி இருக்காங்கனு புரிஞ்சது. அந்த எலிக்கதை என்னனு தெரிஞ்சிக்க உங்களுக்கும் ஆவலா இருக்குதா ? சொல்றேன்..
ஒரு ஊர்ல ஒரு ஆலமரம் இருந்துச்சாம்.. அந்த மரத்துல எல்லாப் பறவைகளும், விலங்குகளும் குடியிருந்துச்சாம். அந்த ஆலமரத்துக்கு அடியில உள்ள ஒரு பொந்துக்குள்ள எலி ஒண்ணு வாழ்ந்துச்சாம். எலியை மட்டுமல்ல, அந்த ஆலமரத்துல வந்து தங்குற பறவையெல்லாம் அடிச்சு சாப்பிட அந்த மரத்து மேல ஒரு பூனையும், கீரிப்பிள்ளையும், கூடவே ஒரு கோட்டானும் காத்துக்கிட்டு இருந்துச்சாம்.. ஆக மொத்தம் நம்ம கதையில நாலு கேரக்டர்.
எலி,பூனை,கீரிப்பிள்ளை,கோட்டான்: இந்த நாலுபேர நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க, இவங்கள வச்சிதான் நம்ம கதையே நகருது. இப்படி இந்த நாலும் அந்த ஆலமரந்தான் தன்னுடைய வீடுன்னு நெனச்சுக்கிட்டு ஜாலியா இருந்துக்கிட்டு இருக்குதுங்க.. அப்போ ஒரு வேடன் அந்த ஆலமரத்துக்கு அடியில ஒரு வலைய விரிச்சி வச்சுட்டு அடுத்த நாள் ஏதாவது வலையில மாட்டுனா பிரியாணி செஞ்சு சாப்புடலாம்னு நெனச்சுட்டு வீட்டுக்கு போய்ட்டான் ..
வேடன் விரிச்ச அந்த வலைல மாட்டுனது யாருனு தெரியுமா? நம்ம பூனைதான்! பூனை பார்த்து சூதானமா ஒரு இடத்துல நிக்காம அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் ஓடிக்கிட்டே திரிஞ்சதால; தெரியாம அந்த வலைக்குள்ள தவறி விழுந்திடிச்சி. நம்மளும் இப்படிதான் யாரு எங்கிட்டு இருந்து வலை விரிக்கிறாங்கனு தெரியாம் பூனைமாதிரி வலைல போய் விழுந்துடுறோம்.
இப்படி அந்தப் பூனை சும்மா கிடக்காம அங்கிட்டும், இங்கிட்டும் ஓடிக் கடைசில வலைக்குள்ளபோய் மாட்டி,எப்படிடா இந்த வலைக்குள்ள இருந்து தப்பிக்கலாம் எவன்டா கெடப்பான்னு காத்திருக்குது. அந்த நேரம் பார்த்து கரெக்டா ஒரு இழிச்சவாயன் அங்க வாரான்..
யாரு அந்த இழிச்சவாயன்னு கேக்குறீங்களா?? நம்ம எலிதான்..
அது எப்படி அங்க வந்து சிக்கிச்சினு கேக்குறீங்களா? அந்த மரத்துல இருக்குற கீரிப்புள்ளைக்கும், கோட்டானுக்கும் ரொம்ப பசிச்சதால அதுங்க ரெண்டும் சேர்ந்து எலிய வேட்டையாடலாம்னு நெனச்சி டார்கட் பண்ணி எலிய விரட்ட ஆரம்பிச்சிடிச்சு, அதான் எலித் தப்பிச்சி ஓட வேற இடமில்லாம பூனைக்குப் பக்கத்துல ஓடிவந்து ஐக்கியமாயிடுச்சு.
அதாவது எலி இப்ப தற்போதைய எதிரியான கீரிப்பிள்ளையையும், கோட்டானையும் சமாளிக்கிறதுக்காக, தன்னோட பரம எதிரியான பூனையோட மடியில போய் உக்காந்துக்கிச்சு. இப்ப எலிக்கு பூனையோட சேர்த்து மொத்தம் நாலு எதிரிங்க.. கீரிப்பிள்ளை, கோட்டான்,பூனை, வேடன். இந்த நாலு பேர்கிட்ட இருந்தும் எலி எப்படித் தப்பிக்குதுனு பார்ப்போம்.
எப்படா வலைல இருந்து நம்மல அவுத்து வுடுவாங்க, வயிறு வேற பசிக்குதே, பக்கத்துலே எலி இருந்தும் நம்மளால சாப்பிட முடியலயேனு வலைக்குள்ள பூனை வருத்தத்துல இருந்துட்டு இருக்கு.. ஆனால் எலியோ, பூனையோட பலவீனத்தை யூஸ் பண்ணிக்கிட்டு வலைக்குள்ள இருக்குற பூனமேல ஏறி ஜடுகுடு ஆடிட்டு இருக்கு. அதுக்கப்பறம் பூனை வலைல இருந்து எஸ்கேப் ஆகுறதுக்கு ஒரு ஐடியா பண்ணுனது.
பூனை நைசா எலி காதுல போய் ,”ஏய் எலியே, நான்தான உன்ன கீரிப்பிள்ளைகிட்ட, கோட்டான் கிட்ட இருந்துல்லாம் காப்பாத்துனேன். நான் எப்படியோ வலைக்குள்ள தெரியாம மாட்டிட்டேன். உன்னோட கூரிய பல்லால இந்த வலைய ஈஸியா கடிச்சி எடுத்துடுவல்ல? எப்படியாச்சு வேடன் வருவதற்குள் என்னைக் காப்பாற்றேன். எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.. ப்ளீஸ்” அப்படினு எலிகிட்ட சிம்பதி க்ரியேட் பண்ணிக் கெஞ்சி கேட்பது போல் பாவம்போல நடித்தது பூனை.
ஆனால் அந்த எலி நம்மளமாதிரி கிடையாது. பயங்கர உஷாரு, “அதெல்லாம் முடியாது. இப்பவே உன்ன நான் வலையிலயிருந்து ரிலீஸ் பண்ணிவிட்டா உனக்கு இருக்குற பசில நீ என்னைய வேட்டையாடிடுவ, அதனால வேடன் பக்கத்துல வரும்போது உன்ன ரிலீஸ் பண்ணி விடுறேன்” அப்படினு சொல்லி பூனைக்கு ஒரு செக் வச்சிடுச்சி.
அதாவது ஒரு படத்துல வடிவேலு குழிக்குள்ள இருக்குறவன் அழுறதப் பாத்துப் பாவப்பட்டு காப்பாத்தப் போறேன்னு சொல்லிட்டு கடைசியில் அவரே குழிக்குள்ள விழுந்துடுவாரே? அந்த மாதிரி இல்லாம, இந்த எலி புத்திசாலித்தனமா பூனைக்கு ஒரு செக் வச்சிடுச்சு..
அதுக்கப்புறம் அடுத்த நாள் வலைக்குள்ள எதாவது விழுந்து இருக்கானு பாக்குறதுக்கு வயித்துப் பசியோட வேடன் வாரான்.. வேடன் பக்கத்தில வந்துக்கிட்டு இருக்குறதப் பார்த்த எலி, இப்போ பூனையை அவுத்துவிட்டாதான் பூனை மட்டும் இல்ல,நம்மள வேட்டையாடக் குறிவச்சு காத்துட்டு இருக்குற கோட்டானும், கீரிப்பிள்ளையும் வேடனுக்குப் பயந்து தெறிச்சி ஓடிடும்,நம்ம அந்த கேப்பில பொந்துக்குள்ள ஓடிபோய்டலாம்னு பக்காவா பிளான் பண்ணிடிச்சு. அப்படியே மெதுமெதுவா வலைய கடிச்சி பூனைய ரிலீஸ் பண்ண ஆரம்பிச்சது.
அதுக்கப்பறம் வேடன் ரொம்ப பக்கத்துல வந்ததும் வலைய ஃபுல்லாக் கடிச்சிப் பூனைய வேகமா ரிலீஸ் பண்ணி விட்டுட்டு, அதுவும் எஸ்கேப் ஆகி பொந்துக்குள்ள ஓடிப்போயிடுச்சு. வேடன் பக்கத்துல வந்துட்டதால பூனையும் வேடனுக்குப் பயந்து தெறித்து ஓடிவிட்டது, அதோடு சேர்ந்து எலியைக் குறிவைத்துக் காத்திருந்த கோட்டானும், கீரிப்பிள்ளையும் வேடனுக்குப் பயந்து மரத்தை விட்டே ஓடிவிட்டது.
கடைசியில் பூனை, கோட்டான், கீரிப்பிள்ளை, வேடன் ஆகிய அனைத்து எதிரிகளிடம் இருந்தும் எலி புத்திசாலித்தனமாகத் தப்பிச்சிடுச்சி. இப்படிதான் நம்மளும் எலிய மாதிரி வாழ்க்கைல சமயம் பார்த்து புத்திசாலித்தனமா செயல்பட்டு பூனை, காட்டான், கீரிப்புள்ளை இன்னும் பல மனித மிருகங்கள் கிட்ட இருந்து நம்மளக் காப்பாத்திக்கனும்.
அந்த சம்பவம் நடந்த அடுத்தநாள் பூனைக்கு பயங்கரப் பசி.. உடனே எலியோட பொந்துகிட்டப் போய் நின்னுக்கிட்டு,”ஏய் எலியே இப்பதான் நம்ம ரெண்டுபேரும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டோமே? ஏன் இன்னும் பயந்து பொந்துக்குள்ளே இருக்குற? வெளில வா” அப்படினு எலிய நைசா கூப்பிட்டது. ஆனால் எலி முட்டாள்த்தனமா பூனை சொல்றத நம்பாம, நம்மளத் திங்கிறதுக்குத்தான் பூனை வந்துருக்குனு தெரிஞ்சிக்கிட்டு, பொந்துக்குள்ளே இருந்துக்கிட்டே பதில் சொல்லுது..
“ஏய்’ பூனையே! நேற்று நீ எனக்கு உதவினாய், நானும் பதிலுக்கு உனக்கு உதவினேன். அவ்வளவுதான், அத்தோட நிறுத்திக்கலாம். ப்ரண்டு, க்ரண்டுன்னு சொல்லிக்கிட்டு என் பொந்துப் பக்கம் வந்துடாதனு“சொல்லி புத்திசாலித்தனமா பூனையை விரட்டி விட்டுடிச்சி.அதனால எலிய மாதிரி நம்மளும் நம்ம கவுத்துவிடுற ப்ரண்ட்ஸப் பக்கத்துல வச்சுக்கிடக் கூடாது.. இதுதான் எங்க அப்பா சொன்ன அந்த எலிக் கதை.. இந்தக்கதை மகாபாரதத்தில் வரும்னு எங்க அப்பா சொன்னாங்க.
ஆனால் இந்தக் கதையில வரும் யாருமே நல்லவங்களும் கிடையாது, கெட்டவங்களும் கிடையாது.. எல்லாருமே சந்தர்ப்பவாதிங்கதான்.. விலங்குகளைக் கொல்வது பாவம்தான்னு வேடனுக்குத் தெரியும். ஆனா என்ன செய்றது, அவனுக்குப் பசிக்குதே. அதனால அவன் வயித்துக்காக அவன் வலைய விரிச்சு வச்சிட்டுப் போய்ட்டான்..
பூனை,கோட்டான்,கீரிப்பிள்ளை, இதுங்கெல்லாம் எலிய அடிச்சுத் திண்ணாதான் உயிர் வாழ முடியும்.. ”ஆடு பாவம்னு நெனச்சா, பிரியாணி சாப்புட முடியுமா?!”அந்தமாதிரிதான் அதுங்க வயித்துப் பொழப்புக்காக எலிய விரட்டுதுங்க. அதனால அதுங்க மேலயும் தப்பில்லை.. எலி தன்னைக் காப்பாத்திக்கிறதுக்கு வேறவழியில்லாம பூனையோட பலவீனத்த யூஸ் பண்ணிகிடுச்சு. அதனால அது மேலயும் தப்பில்ல.
இப்படிதான் மனுசங்களும் அவங்க செய்றது தப்புனு தெரிஞ்சும் அவங்க வயித்துப் பொழப்புக்காக பொய் ,பித்தலாட்டம் கொலை, கொள்ளைனு எல்லாம் செய்ராங்க. அப்ப நம்மதான் பலியாடாப் போகாம எலி மாதிரிப் பார்த்து கவனமா இருந்துக்கனும்.
“மிருகங்கள் மட்டும் இல்ல மனுசங்களும் கூட இப்பல்லாம், தான் உயிர் வாழனுங்கறதுக்காக அடுத்தவங்கள அடிச்சி சாப்பிடனும்” அப்படிங்கிற ஒரே கொள்கையைத்தான் வச்சிருக்காங்க, அதனால எல்லாரும் பார்த்து சூதானமா இந்தக் கதையில வர எலி மாதிரி புத்திசாலித்தனமா இருந்து பொழச்சுக்கோங்க மக்களே!