7 தமிழர்கள் விடுதலையில் உரிய முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தாக மு.க.ஸ்டாலி்ன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் ஆளுநரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு, மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
7 பேர் விடுதலை
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இதனிடையே 2018, செப்டம்பர் மாதம், இதற்காக தமிழக அமைச்சரவை கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, நாங்கள் ஆளுநரிடம் வலியுறுத்தியிருக்கிறோம். சட்டரீதியாக, மனிதாபிமானத்துடன் முடிவெடுக்க வேண்டும் என, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறோம்.
ஆளுநர் உறுதி
ஏறக்குறைய 29 ஆண்டுகள் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனை ஆளுநரிடத்தில் நாங்கள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இது தொடர்பாக, உரிய முடிவை எடுப்பதாக எங்களுக்கு அவர் உறுதியளித்துள்ளார். காலதாமதம் குறித்துக் கேட்டபோது, அதிலுள்ள சட்டரீதியான பார்வையை விளக்கினார்.
தருமபுரி பேருந்து எரிப்புச் சம்பவத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதனை ஆளுநரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.