சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கும் கருத்து தோழமை கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி, சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா? என்ற சந்தேகம் இரு அணிகளிலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணி தொடருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் பாமக, திமுக கூட்டணிக்கு மாற வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜக தனி கூட்டணியை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சட்டப்பேரவை தேர்தலிலும், இதே கூட்டணி தொடர ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், திமுக பொதுச்செயலாளராக உள்ள வன்னிய சமூகத்தைச் சேர்ந்த துரைமுருகன், பாமகவை திமுக கூட்டணிக்குள் இழுக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதேசமயம் இந்த முயற்சி வெற்றி பெற்றால், திமுக கூட்டணியில் உள்ள விசிக அங்கிருந்து வெளியேறுவது உறுதியாகி விடும்.
இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது ‘தமிழகத்தில் ஒரு கூட்டணியில் இருந்து வேறு கூட்டணிக்கு தேர்தல் நேரத்தில் கட்சிகள் இடம் மாறுவது வழக்கமான ஒன்றுதான் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், சட்டசபை தேர்தலை பொறுத்த வரை வேட்பு மனுக்கள் வாபஸ் முடிந்தால் தான் யார் யாருடன் கூட்டணி என்பது உறுதியாகும் எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.




