மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுகவின் இடைபொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக பதாகைகளை( மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவைகளைக் கண்டித்து கைகளில் அரிக்கன் விளக்கு & பதாகைகளை ) ஏந்தி அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”கருணாநிதி நினைவிடத்திற்காக ₹30கோடிக்கு அதிகமாகவும், பேனா நினைவு சின்னத்திற்காக ₹80 கோடிக்கு அதிகமாகவும் திமுக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மதுரையில் உள்ள சாலைகள் அனைத்தும் பராமரிக்கப்படாமலேயே உள்ளது. இவை அனைத்தும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கான அறிகுறி. திமுகவின் எதிரி அதிமுகதான். திமுகவிற்கு பின் நாங்கள்தான் என்று கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடம்.இது காசுக்காக கூட்டி வரப்பட்ட கூட்டம் அல்ல, தானா சேர்ந்த கூட்டம் என்று கூறினார்.
-பா.ஈ.பரசுராமன்.




