திமுக ஆட்சியில் காவல்துறை செயலற்று கிடக்கிறது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, அரும்பாக்கம் வங்கி கொள்ளை, நிதியமைச்சர் பிடிஆர் வாகனத்தின் மீது செருப்பு வீச்சு என பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அம்மா ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளை புரிந்த; பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடத்திலும், மாநில அளவில் தமிழகம் முதலிடத்தையும் பெற்ற தமிழகக் காவல் துறை இன்று கட்டுண்டு கட்டுண்டு சுதந்திரமாகச் செயல்பட வழியின்றி விடியா அரசின் ஏவல்துறையாக செயல்பட்டுக்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 13.8.2022அன்று பகல் சுமார் 2.30 மணியளவில் 3பேர் கொண்ட கும்பல்,சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அரும்பாக்கம்,ரசாக்கார்டன் சாலையிலுள்ள ஒருதனியார் வங்கியில் நுழைந்து, காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து,ஊழியர்களை கத்தியைக் காட்டிமிரட்டி கட்டிப்போட்டுவிட்டு வங்கியினுள் இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்ற செய்தி தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று விளம்பரங்கள் மூலம் தன்னைத் தானே மார்தட்டிக் கொள்ளும், நிர்வாகத் திறமை இல்லாத இந்த விடியா அரசின் முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில், சென்னை மாநகரில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான சூத்திரதாரிகளையும், உண்மையான கொள்ளையர்களையும் காவல் துறை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. எனவே,இனியாவது இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர், தமிழகக் காவல் துறையினை சுதந்திரமாக,சட்டப்படி செயல்பட அனுமதித்து,தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என காட்டமாக தெரிவித்துள்ளார்.




