குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது பிரதமராவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, குஜராத்தின் முதலமைச்சராக பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2014இல் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், பொது வாழ்க்கைக்குப் பிரதமர் மோடி வந்து 20 ஆண்டுகளை நேற்று நிறைவு செய்துள்ளார்.
இதை முன்னிட்டு அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும், பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த 20 ஆண்டுகளில், மக்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்காக நரேந்திர மோடி அல்லும் பகலும் கடுமையாக உழைத்தார். ஏழைகள் மற்றும் அந்தியோதயாவின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் மோடி, தமது வலுவான உறுதிப்பாட்டினாலும், வருங்காலம் குறித்து முன்கூட்டியே சிந்திப்பதன் மூலமும் சாத்தியமற்றதை சாத்தியமாக்கினார். முதலில் குஜராத்திலும் பின்னர் மத்தியிலும் அவரது தலைமையில் அரசிலும், அமைப்பிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். மோடி அவர்களின் தலைமையின் கீழ் வலுவான, சுயச்சார்பு மிக்க இந்தியாவை உருவாக்க வேண்டும்” என்று பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நேற்று ரிஷிகேஷ் எய்ம்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது, “ஒரு பொது அலுவலகத்தில் எனது பயணம் பல தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கியது. நான் 2001இல் குஜராத்தின் முதல்வரானேன். பின்னர் மக்களின் ஆதரவுடன் பிரதமரானேன். ஆனால், நான் ஒரு நாள்கூட பிரதமராவேன் என அப்போது நினைத்துக்கூட பார்த்ததில்லை. இந்த ரிஷிகேஷியில் இருந்து எனது 21ஆம் ஆண்டின் பயணம் தொடர்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.




