நக்சல் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவை விடுவிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்திய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்த அதிகாரிகளை இன்று (07.06.2025) புது தில்லியில் சந்தித்துப் பேசினார். சமீபத்திய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நக்சல் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவை விடுவிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.


“சமீபத்திய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளைச் சந்தித்தேன். இந்த நடவடிக்கைகளின் வரலாற்று வெற்றிக்காக அவர்களை வாழ்த்தினேன். இந்த நடவடிக்கைகளை தங்கள் துணிச்சலால் வெற்றிகரமாக்கிய வீரர்களைச் சந்திக்க நான் ஆவலாக உள்ளேன். விரைவில் அவர்களைச் சந்திக்க சத்தீஸ்கருக்குச் செல்வேன். நக்சல் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவை விடுவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, 18.05.2025 முதல் 21.05.2025 வரை அபுஜ்மத்தின் உட்புறப் பகுதிகளில் சத்தீஸ்கர் காவல்துறை நடவடிக்கையை மேற்கொண்டது. 21.05.2025 அன்று, போடர் கிராமத்தின் காடுகளில் நடந்த ஒரு மோதலில், மாவோயிஸ்ட் பொதுச் செயலாளரும், அரசியல் தலைமையக உறுப்பினருமான பசவராஜு என்கிற ககன்னா உட்பட 27 நக்சல்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன.


சத்தீஸ்கர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் திரு அருண் தேவ் கௌதம், கூடுதல் காவல் இயக்குநர் திரு விவேகானந்த் உள்ளிட்ட இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கௌரவித்தார். இந்த நிகழ்வில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் திரு. விஜய் குமார் சர்மா, மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.