பிரதமர் நரேந்திர மோடி இன்று (07.06.2025) காணொலிக் காட்சி மூலம் 2025-ம் ஆண்டுக்கான சர்வதேச பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த மாநாட்டில் உரையாற்றினார். ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படும் 2025-ம் ஆண்டுக்கான பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டிற்கு வந்த பங்கேற்பாளர்களை பிரதமர் வரவேற்றார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவளித்த பிரான்ஸ் அரசுக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அடுத்து நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டிற்கும் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

‘கடலோரப் பகுதிகளுக்கு ஒரு நெகிழ்திறன்மிக்க எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற மாநாட்டின் கருப்பொருளை எடுத்துரைத்த நரேந்திர மோடி, இயற்கை பேரழிவுகளாலும் பருவநிலை மாற்றத்தாலும் கடலோரப் பகுதிகளும் தீவுகளும் பாதிக்கப்படக்கூடியவை என்பதை சுட்டிக் காட்டினார். இந்தியாவிலும் வங்கதேசத்திலும் ரெமல் புயல், கரீபியனில் பெரில் சூறாவளி, தென்கிழக்கு ஆசியாவில் யாகி புயல், அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளி, பிலிப்பைன்ஸில் உசாகி புயல், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சிடோ புயல் உள்ளிட்ட சமீபத்திய பேரழிவுகளை அவர் மேற்கோள் காட்டினார். இந்தப் பேரழிவுகள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் இது மீள்தன்மை கொண்ட உள்கட்டமைப்பின் அவசியத்தையும் முன்னெச்சரிக்கை பேரிடர் மேலாண்மைக்கான தேவையையும் வலியுறுத்துகின்றன என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
1999-ம் ஆண்டின் சூப்பர் சூறாவளி, 2004-ம் ஆண்டின் சுனாமி உள்ளிட்ட பெரிய பேரழிவுகளுடன் இந்தியாவின் கடந்த கால அனுபவங்களை நினைவு கூர்ந்த பிரதமர், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் புயல் தங்குமிடங்களை உருவாக்குதல், 29 நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதில் இந்தியா எவ்வாறு பங்களித்தது போன்றவற்றை எடுத்துரைத்தார்.
பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI), 25 சிறு தீவுகளில் அமைந்துள்ள வளரும் நாடுகளுடன் இணைந்து மீள்தன்மை கொண்ட வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், எரிசக்தி அமைப்புகள், நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் அமைப்புகளை உருவாக்கி வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார். பசிபிக், இந்தியப் பெருங்கடல், கரீபியன் பிராந்தியங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருப்பதற்குப் பிரதமர் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், கூட்டணியில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பங்கேற்பை அவர் வரவேற்றார்.
முக்கிய உலகளாவிய முன்னுரிமைகள் குறித்து கவனத்தை ஈர்த்து, பிரதமர் 5 முக்கிய முன்னுரிமை தலைப்புகளை சுட்டிக் காட்டினார். முதலாவதாக, எதிர்கால சவால்களைச் சமாளிக்கத் தகுதியான திறமையான பணியாளர்களை உருவாக்க, பேரிடர் தாங்கும் கற்றல்கள், திறன் மேம்பாட்டுத் திட்டங்களை உயர் கல்வியில் ஒருங்கிணைப்பது முக்கியம் என அவர் கூறினார். இரண்டாவதாக, பேரிடர்களைத் தாங்கும் திறன் கொண்ட நாடுகளிடமிருந்து சிறந்த நடைமுறைகளையும் கற்றல்களையும் ஆவணப்படுத்த உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மூன்றாவதாக பேரிடர் தாங்கும் திறனுக்கு புதுமையான நிதி தேவை என்பதையும் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியை முன்னுரிமையாக அணுகுவதை உறுதிசெய்வதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். நான்காவதாக, சிறிய தீவுகளில் உள்ள வளரும் நாடுகளை பெரிய பெருங்கடல் நாடுகளாக இந்தியா அங்கீகரிப்பதை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும் அவற்றின் பாதிப்புகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஐந்தாவது முன்னுரிமையைக் குறிப்பிட்ட அவர், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் அமைப்புகளையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும் திரு நரேந்திரமோடி எடுத்துரைத்தார். சரியான நேரத்தில் முடிவெடுப்பதையும், கடைசி நிலை வரை பயனுள்ள தகவல்தொடர்பை எளிதாக்குவதில் அவற்றின் முக்கிய பங்கையும் குறிப்பிட்டார். மாநாட்டில் நடைபெறும் விவாதங்கள் இந்த அத்தியாவசிய அம்சங்களைப் பற்றி விவாதிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
பேரிடர்களைத் தாங்கி உறுதியாக நிற்கும் உள்கட்டமைப்புகளைக் கட்டமைக்க பிரதமர் அழைப்பு விடுத்தார். வளர்ச்சியில் மீள்தன்மையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். உலகிற்கு வலுவான பேரிடர்-எதிர்ப்புத் திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்க உலகளாவிய முயற்சிகள் தேவை எனக் கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.