நம் மண், மொழி, மானம் காக்க தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களும் ஒரே குடையின் கீழ் இணைந்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் இன்று (7.6.2025) முகாம் அலுவலகத்தில், திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, கழக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான திரு. கே.என். நேரு, கழக துணை பொதுச் செயலாளர்கள் – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, திரு. அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் – நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை #ஓரணியில்_தமிழ்நாடு என திமுகவில் இணைத்திட, சொல்லாற்றல் – செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது. இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்! #களம்2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்! #OraniyilTamilNadu எனக் குறிப்பிட்டுள்ளார்.
