சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருந்தாலும் இப்போதே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தேர்தல் நடைபயணங்கள், மக்கள் சந்திப்புக்கள் என தமிழ்நாடு பிஸியாக ஆரம்பித்து விட்டது. இம்முறை வலுவான கூட்டணி, 4 என்கிற சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பாமகவை தன் வசம் கொண்டு வருவது என பல்வேறு அஜெண்டாக்களோடு இறங்கி அடிக்கத் தொடங்கி இருக்கிறது பாஜக. பாஜகவின் எண்ணங்கள் எந்தளவிற்கு ஈடேறும்? தமிழ்நாட்டிற்கான பாஜகவின் திட்டங்கள் என்ன?
நாளை இரவு மதுரைக்கு வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. பாஜகவின் மாநில நிர்வாகிகளை சந்திக்கும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். மறுநாள் (8-ந்தேதி) மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அன்று மாலை ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி அருகே வேலம்மாள் திடலில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். தேர்தலை ஒட்டி நடைபெறும் கூட்டம் என்பதால் அமித்ஷாவின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்டுகள் கேட்கலாம், எந்தெந்த தொகுதிகளைக் கேட்டு வாங்கலாம், பாஜக சார்பில் நிறுத்தப்பட உள்ள வேட்பாளர்கள் யார், அதிமுகவை உள்ளே கொண்டு வந்து விட்ட சூழலில், குழம்பிக் கிடக்கும் பாமகவை என்ன செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 11ந் தேதி தமிழ்நாட்டிற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். அப்போதே எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் பிரகாசம் இல்லை என அதிமுகவினரே சொன்னார்கள். பாஜகவுடன் கூட்டணி என்பது அதிமுகவினருக்கு இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. நிறையத் தேர்தல்களில் அதிமுகவிற்கு கைகொடுத்தது இரட்டை இலை சின்னமும், சிறுபான்மையினரும் தான். அந்த அடிமட்டத் தொண்டர்கள் பாஜகவின் கூட்டணியை ரசிக்கவில்லை. பாஜக கூட்டணியால் பாஜகவிற்குத் தான் நன்மை விளையுமே தவிர நமக்கில்லை என நினைக்கிறார்கள். இரண்டாம் கட்டத் தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி அதிமுக தலைவர்களே இன்னும் முழுமனதாக கூட்டணியை ஏற்றுக் கொள்ளவில்லை. எதற்கும் இருக்கட்டுமே என்று, தவெக தலைவர் விஜய்க்கும் ஒரு துண்டைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பலமுறை சொன்னாலும் பாஜகவின் தலைவர்கள் விடுவதாய் இல்லை. “அதை உங்க அண்ணன் சொல்லட்டும்ப்பா” என்கிற தோரணையில் தான் இருக்கிறார்கள். விஜய் வந்துவிட்டால் பாஜகவை கழட்டு விட்டு விடலாம் என்று அதிமுக ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்க, விஜயையும் வந்துவிட்டால் தங்கள் கூட்டணி வலுவாகி விடும் என்று பாஜக மாநிலத் தலைவர்கள் கணக்குப் போட்டு வைத்திருக்க, அதிமுக கழண்டு கொண்டால் பாமகவையாவது தனது கண்ட்ரோலில் எடுக்க வேண்டும் என பாஜக தேசியத் தலைமை கணக்குப் போட்டு வைத்திருக்கிறது.

இன்செப்சன் மாதிரியான படங்களில் கனவுக்குள் கனவு என்கிற யுக்தியை வைத்திருப்பார்கள். அதுபோலத்தான், அதிமுக, பாஜக, பாமக,தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணிக்குள் கூட்டணி என்று இயங்கிக் கொண்டிருக்கின்றன.
வழக்கமாக கட்சிகளை உடைத்து அதன் மூலம் தனக்கான ஆதாயத்தைத் தேடும் பாஜக முதன்முறையாக பாமக பிரிந்து விடக் கூடாது என நினைக்கிறது. இணைப்பிற்கான முயற்சிக்கு ஆடிட்டர் குருமூர்த்தியை அனுப்பி வைக்கிறது, தன் சொந்த அப்பா வீட்டிற்கு மகன் அன்புமணியை அனுப்பி வைக்கிறது. கட்சியை பிரிக்காமல் சேர்க்கும் யுக்தியை அரசியல் வட்டாரங்களே ஆச்சரியமாகப் பார்க்கின்றன.

டாக்டர் ராமதாஸ் அதிமுகவை விரும்புகிறார். அன்புமணி பாஜகவை விரும்புகிறார். இருவரையும் ஒன்றாக பாஜக விரும்புகிறது. ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி என்கிற நிலைப்பாட்டை பாமக எடுத்தால் அதிமுக, பாமக, தவெக என்கிற கூட்டணி உருவாகலாம். பாஜவைப் பொறுத்தவரை யார் கூட்டணி அமைத்தாலும், தங்கள் கூட்டணியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள நினைக்கிறது.

அமித்ஷா வந்து சில பல ஆலோசனைகளை கொடுத்து விட்டுச் சென்ற அதே வேகத்தில் இந்து முன்னணி நடத்துகிற முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22ந் தேதி மதுரையில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களில் செயல்பட்டு வரும் முருகன், ஐயப்பன், ஓம்சக்தி, சாய்பாபா பக்தர்கள் குழுக்களை சந்தித்து மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பாஜகவினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதன் முக்கிய சூத்திரதாரியாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இதைத்தான் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். முருக பக்தர்கள் மாநாடு அல்ல, சங்கிகள் மாநாடு என. அரசியல் நோக்கர்களும் இதை வழிமொழிகிறார்கள்.
ஆன்மீகம், காலம் காலமாக அதன் போக்கில் இருந்து வருகிறது. அரசியலும் தன் போக்கில் செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜக தலையெடுக்கத் தொடங்கிய பிறகு ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்வது என்பது வாடிக்கையாகி விட்டது. அதையே தான் முருகன் பெயரிலும் செய்யப் போகிறது என பக்தர்கள் வருத்தப்படுகின்றனர்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை இம்முறை பேசுபொருளாக மாறியிருப்பது மதுரைதான். திமுக ஏற்கனவே தனது தேர்தல் பயணத்தை பொதுக்குழுக் கூட்டம் என்ற பெயரில் தொடங்கி விட்டது. அதிமுகவும் மக்கள் யாத்திரையை விரைவில் தொடங்க உள்ளது. தவெகவும் மதுரையைக் குறிவைத்தே ஆகஸ்டில் தனது பயணத்தை வகுக்க உள்ளது. பாஜகவும் முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் மதுரையில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மதுரையைத் தேர்ந்தெடுக்கின்றன கட்சிகள். மாற்றம் தருமா என்று பார்க்கலாம்.