மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிப்போம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று துவங்கியது. மதுரை மேலமாசி வீதியில் பிரச்சாரத்தை துவங்கிய கமலைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக தென்பட்டது. காவல் துறை அனுமதிக்காததால் மைக்கில் பிரச்சாரம் செய்யாமல் வணக்கம் வைத்தபடி, வாக்கு கேட்டுச் சென்றார் கமல்ஹாசன்.
பின்னர் வியூகம் 2021 என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய கமல்ஹாசன் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்பிறகு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மத்தியில் பேசினார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில்தான் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கினோம். அதனால் இங்கிருந்து பிரச்சாரம் செய்வதுதான் சரி என்பதால் இங்கு தொடங்குகிறோம் என்றார் கமல்ஹாசன்.
read more: பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்குக் கொரோனா: தமிழகம் வருகை ரத்தாகுமா?
மக்களின் ஒத்துழைப்போடு நிச்சயம் ஊழலை ஒழிக்க முடியும். ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு. மே மாதத்தில் கயவர்களோடு மல்லுக்கட்டு. துன்பப்படும் மக்களைப் பார்த்துவிட்டு இறந்தால், எனக்கு நல்ல சாவு கிடைக்காது எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன், “உலகத்தில் விவசாயம் எப்போது தோன்றியதோ அப்போதே மதுவும் தோன்றிவிட்டது. மதுவை ஒழிப்பேன் என்று சொன்ன எந்த அரசும் அதில் வெற்றிபெறவில்லை. மதுவை ஒழிப்பதாகக் கூறி கள்ளச்சாராயத்துக்கு நாம் விதைபோட்டுவிடக் கூடாது” என்றார்.
தொடர்ந்து, “அரசாங்கம் மதுவை விற்பனை செய்யக் கூடாது. எங்களுடைய ஆட்சியில் மது விற்பனை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றிக்காட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கனவு கண்டார். அந்த கனவின் நீட்சிதான் நான். இப்போது வந்து எம்.ஜி.ஆரின் நீட்சி நீ என்கிறாயே என்ற கேள்வி உங்களுக்கு எழும். எம்.ஜி.ஆர் கனவை நனவாக்காமல் உறங்கிக் கொண்டுள்ளார்கள் இந்த ஊழல்வாதிகள். ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது. எங்கள் ஆட்சியில் மதுரை இரண்டாம் தலைநகராக மாற்றப்படும்” என்றும் கூறினார்.