புதுச்சேரி மாநில நியமன எம்.எல்.ஏ.வும், பாஜகவைச் சேர்ந்தவருமான சங்கர் மாரடைப்பால் திடீரென காலமானார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர்களை தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. இவர்களில் சங்கர் பாஜக மாநில பொருளாளராகவும் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு வரை கட்சி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சங்கர், இன்று பாஜக சார்பில் நடக்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்தார். நேற்று இரவு உறங்கச் சென்ற அவர் இன்று காலை வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சங்கரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இரவு உறக்கத்தின் போது மாரடைப்பால் சங்கர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சங்கரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பிருந்தாவனம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
read more: மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!
சங்கர் மறைவால் புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 2 ஆக குறைந்தது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதுச்சேரியில் காலூன்றுவதற்கு பாஜக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சங்கரின் மறைவு புதுச்சேரி மாநில பாஜகவுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.




