கால்வாய்கள், கழிவுநீர் வடிகால்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்டவற்றை முறையாக தூர்வாரி முடிக்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் – சென்னை மற்றும் அதையொட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கடந்தாண்டு பருவமழை நேரத்தின் போது, தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மழை காலத்தில் நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை உதயநிதி கேட்டறிந்தார்.
மேலும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை வலியுறுத்திய உதயநிதி, கால்வாய்கள், கழிவுநீர் வடிகால்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்டவற்றை முறையாக தூர்வாரி முடிக்கவும், சாலைப்பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும். கனமழை நேரத்தில், வருவாய்த்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, மின்சாரத்துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மழை நேரத்தில் உயிர்சேதம், பொருட்சேதம் ஏதுமில்லை என்ற நிலையை உருவாக்கிட அனைவரும் திட்டமிட்டு களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.




