கடலூரில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக அருவாமூக்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூரில் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை தொழில்துறை அமைச்சர் சம்பத் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
புரவி புயல்
கடலூர் மாவட்டத்தில் புரவி புயலின் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்ற நிலையில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. தண்ணீரை வடியவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அருவாமூக்கு திட்டம்
பெருமாள் ஏரியிலிருந்து விநாடிக்கு 6,257 கன அடி தண்ணீர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது. மழையளவை பொறுத்து படிப்படியாக வெளியேற்றும் தண்ணீரின் அளவு குறைக்கப்படும். பரவனாற்றில் வரும் தண்ணீர், கடல் உள்வாங்காததால் நிலப்பகுதியில் அதிகமாக தேங்கி பாதிப்புகள் ஏற்படுகின்றன. அருவாமூக்கு திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது இப்பாதிப்புகள் தவிர்க்கப்படும்
விரைவில் செயல்பாடு
அருவாமூக்கு திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.54.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.60 கோடி நிதி தேவைப்படும் என அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அருவாமூக்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.