தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியே அமையும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
வலங்கைமானில் வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை ஆணை 893 பயனாளிகளுக்கும், ஊனமுற்றோர் உதவித்தொகை ஆணை 45 பயனாளிகளுக்கும், விதவை உதவித்தொகை ஆணை 302 பயனாளிகளுக்கும், கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை 5 பயனாளிகளுக்கும் ஆக 1245 பயனாளிகளுக்கு ரூபாய் 12லட்சத்து 45 ஆயிரம் உதவித்தொகை ஆணைகளை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று வழங்கி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பா.ஜ.க தலைவர் முருகன் நாங்கள் கை காட்டுபவர் தான் அடுத்த முதல்வர் எனக் கூறுவது அவருடைய சொந்த கருத்து. மக்கள் நலத்திட்டங்கள் மூலம் தேர்தலில் மக்களின் ஆதரவோடு மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்.
அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து கூறியதைத் தவிர்த்து இருக்க வேண்டும். அவரின் பேச்சை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அனைவருக்கும் தெரியும்.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கூட்டமான இடங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்” என்றார்.