ஐயகோ அவமானம்… காமராஜர் முடிந்து போன பிரச்சினையா மிஸ்டர் செல்வப்பெருந்தகை என பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா முன்னாள் முதலமைச்சர் காமராஜரைப் பற்றிப் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஒற்றை காரணத்தால், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை தங்களது இஷ்டத்துக்கு திருத்தி, திரித்து எழுதுவதும் பேசுவதும் திமுகவினருக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதி கற்றுக்கொடுத்த கைவந்த கலை.
காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் எனவும் அதனால்தான் அவர் திமுக அரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட போதும் தமிழ்நாட்டின் பயணியர் விடுதிகளில் எல்லாம் குளிர்சாசன வசதி பொருத்தியதாக கருணாநிதி தன் காதில் சொன்னதாக திருச்சி சிவா பேசியிருக்கிறார்.
இதை நியாயப்படுத்துவதற்காக கருணாநிதி பேசிய வீடியோவையும் சமூக தளங்களில் திமுகவினர் பரவ விட்டிருக்கிறார்கள். காமராஜரின் 123-வது பிறந்தநாளில் அவரின் புகழ் பாட வேண்டிய நிலையில்… இதுபோன்ற மலினமான, கருணாநிதி உருவாக்கிய கருத்துருவாக்கங்களை இப்போது மீண்டும் பரப்ப வேண்டிய அவசியம் என்ன? காமராஜரை சிறுமைப்படுத்திட வேண்டும் என்றே திட்டமிட்டு திமுக, இந்த நிகழ்வுகளை நடத்திக் காட்டியிருக்கிறது. அது மட்டுமல்ல… உயிர் போவதற்கு முன்பாக கருணாநிதியின் கையைப் பிடித்து நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற நீங்கள் தான் இருக்கிறீர்கள் என காமராஜர் பேசியதாகவும் திருச்சி சிவா உலக மகா உருட்டை உருட்டியிருக்கிறார். காமராஜரை பற்றி அவர் இருக்கும் போது கருணாநிதி எழுதிய, பேசிய அவதூறுகளை இப்போது மேற்கோள் காட்டி கூட சொல்ல இயலாது. அவையெல்லாம் அவ்வளவு ஆபாசமானவை, அவ்வளவு மலினமானவை.
ஆனால் அவர் மறைந்த பிறகும் காமராஜர் மீதான அவதூறுகளை திமுக நிறுத்தவில்லை. காமராஜரை திமுக அவமரியாதை செய்வது கண்டிக்கத் தக்கது என்றால், காங்கிரஸ் கட்சியே இதைக் கண்டும் காணாமல் இருப்பது அதை விட கண்டிக்கத் தக்கதாகும். காமராஜர் ஒரு செயின் ஸ்மோக்கர் என்பது வரை திமுகவினர் சமூக தளங்களில் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கும் நிலையில், இதேபோல திராவிட இயக்கத் தலைவர்களின் தனிப்பட்ட நிகழ்வுகளை பட்டியலிட ஆரம்பித்தால் என்னாகும்? பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், “திரு காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்கு பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும் சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்” என்று உயர்ந்த்த வார்த்தைகளை குறிப்பிட்டு மரியாதை செலுத்தியிருந்தார்.

ஆனால் திமுக காமராஜரை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்த, அதை காங்கிரஸ் எந்த அளவுக்கு சகித்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு சகித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகும் அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் காமராஜர் என்று தொடங்கும்போதே, ‘அது முடிந்துபோன பிரச்சினை’ என்கிறார். திமுகவிடம் சுயமரியாதையையும் தன் மானத்தையும் அடகு வைத்த செல்வப்பெருந்தகைக்கு, காமராஜர் ஒரு முடிந்துபோன பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் காமராஜரை நெஞ்சில் பூஜிக்கும் தேசிய உள்ளங்களில் இந்த வார்த்தைகள் தீயாக சுடுகிறது. காமராஜர் என்ன திருச்சி சிவாவின் தற்போதைய தலைவர் ஸ்டாலினை போன்றவரா? சென்ற இடங்களில் எல்லாம் சொகுசு ஹோட்டல்களில் தங்குபவரா? வயல்வெளிகளிலும் ரெட் கார்பெட் விரித்து நடந்தவரா? கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள வாகனத்தில் பவனி வந்தவரா? திருச்சி சிவாவை பற்றி டெல்லி முதல் தமிழ்நாடு வரை நாறிய கதையெல்லாம் நாடறியும். சிவா, நாவை அடக்க வேண்டும். இந்த பிரச்சினையில் இருந்து காமராஜரை உரிமை கொண்டாடும் தார்மீக உரிமையை காங்கிரஸ் இழந்துவிட்டது. காமராஜர் முடிந்துபோன பிரச்சினை அல்ல, என்பதை வரும் தேர்தலில் நிரூபிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.




