கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் -2ல் இருந்த ரோவர் கருவி வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வான்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பெரும் சாதனையாக கருதப்படுவது கடந்தாண்டு நிலவை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் – 2 விண்கலம். உலகின் வல்லரசு நாடுகள் பணத்தை அள்ளிக் கொட்டிய சமயத்தில், எளிமையான பட்ஜெட்டில் தரமான விண்கலத்தை வடிவமைத்து பலரையும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட செய்தனர். ஆனால், அதில் இருந்த லேண்டர் பிரிவில் இடம் பெற்றிருந்த பிரக்யான் எனும் நிலவின் மேற்பகுதியை ஆராயும் திறன் கொண்ட ரோவர் கருவியை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் போனது ஒட்டுமொத்த இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆதேசமயம், அதில் இருந்த மற்ற கருவிகள் தொடர்ந்து திறம்பட செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட லேண்டர் பிரிவின் உடைந்த பாகங்களை, சென்னையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் எனும் மென்பொறியாளர் கண்டறிந்து இஸ்ரோவிற்கு தகவல் அளித்து பலரையும் ஆச்சரியபடுத்தினார். நாசவும் அவரை பாராட்டி இருந்தது.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய தகவல் பலரையும் மேலும் திகைக்க வைத்துள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த மே மாதம் அமெரிக்க வெளியிட்ட நிலவின் மேற்பரப்பின் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், இந்தியாவின் சந்திராயன் -2ன் லேண்டர் பகுதியில் இருந்து, பிரக்யான் எனும் ரோவர் கருவி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் சில மீட்டர் தூரம் வரையில் அந்த கருவி பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், பூமியில் இருந்து தகவல்களை பெற்ற ரோவர் கருவி, தகவல்களை பூமிக்கு திருப்பி அனுப்பும் திறனை இழந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த தகவலை இஸ்ரோ நிறுவனத்திற்கு அவர் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து இருப்பதாகவும், இந்தியா தரப்பில் நாசவிடம் இதுகுறித்து வினவ உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மை என நிரூபிக்கபட்டால், இந்திய ஆராய்ச்சியாளர்கள் பெரும் சாதனையாக மட்டுமின்றி அடுத்தடுத்த ஆய்வுகளுக்கு பெரும் உந்துகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.