இத்தனை நாட்களாக மனிதனின் விந்தணுக்கள் ஒரு சிறிய பாம்பை போல வளைந்து நெளிந்து வாலை பயன்படுத்தி நீந்தி செல்கின்றன என்று தானே நாம் படித்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த கூற்றினை பொய்யாக்கி விட்டது இந்த ஆய்வு. ஆம், இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிதாக இதை கண்டு பிடித்துள்ளனர்.
1678ம் ஆண்டில் பிரபல டச் விஞ்ஞானியான ஆண்டன் வான் லீவன்ஹூக், தான் கண்டுபிடித்த நுண்நோக்கியை வைத்தே ஆய்வு ஒற்றை நடத்தினார். விந்தணுவை நுண்நோக்கியின் மூலம் ஆராய்ந்த போது அது தலை மற்றும் வாலுடன் நீந்துவதை கண்டறிந்தார். அது பார்ப்பதற்கு ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போல இருந்தது. கிட்டதட்ட 340 ஆண்டுகளாக இந்த கூற்றே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் இதனை மறுக்கவில்லை.
ஆனால் தற்போது பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் புதிய தொழில்நுட்பமான 3டி நுண்ணோக்கியை கொண்டு விந்தணுவை ஆய்வு செய்தனர்.அதில் விந்தணு நாம் நினைப்பது போல் அல்லாமல் சுழன்று சுழன்று செல்வதாக தெரிவித்துள்ளனர். மிகவும் திறன் வாய்ந்த விந்தணுவின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலான ஒரு நுண்ணோக்கியை இதற்கு பயன்படுத்தியுள்ளனர். 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் பயனாக 340 ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்த ஒரு தகவல் உண்மையில்லை என்றாகியுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் கருத்தரித்தல் சிகிச்சைமுறையில் முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.