ஒருவர் இறந்த 6 மணி நேரத்திற்குள் கண்களை எடுத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
கண் தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண் வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை தமிழக அரசின் 104 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு அறியலாம்.
*கண்தான வங்கியில் இருந்து மருத்துவர்கள் வரும்வரை கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்.
*மூடிய இமைகளின் மீது ஈர பஞ்சை வைக்க வேண்டும்.
*இறந்தவர் அறையில் உள்ள மின்விசிறியை அணைத்துவிட வேண்டும்.
*கண் தானம் கொடுக்க வயதுவரம்பு கிடையாது. எந்த வயதினரும் கண் தானம் செய்யலாம்.
*நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கண் தானம் செய்யலாம்.
*எய்ட்ஸ்,மஞ்சள் காமாலை, நச்சு கிருமித்தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய முடியாது.
* ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் ஒருஜோடி கண்களை கொண்டு பார்வையிழந்த 2 பேருக்கு பார்வை கொடுக்க முடியும்.
பிறவி குறைப்பாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்து சுமார் 1,20,000 பேர் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள். கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாக பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள் பார்வை இழந்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். நாம் நினைத்தால் இவர்களுக்கு நிச்சயம் பார்வை கொடுக்க முடியும்.
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கண் தானம் செய்வதின் அவசியத்தை பற்றி எடுத்துக் கூறுங்கள்.
இருக்கும்போதுதான் புண்ணியம் செய்யவில்லை. இறந்த பின்பாவது புண்ணியம் செய்வோம்.
-பா.ஈ.பரசுராமன்.