எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் வல்லமை வாய்ந்த, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவும் எல்லையில் பிரச்னை கொடுக்க தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு அம்சங்களை தீவிரப்படுத்தும் நோக்கில் இந்திய ராணுவம் பல்வேறு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்து வருகிறது.
சமீபத்தில் ஒலியைக் காட்டிலும் வேகமாக செல்லக் கூடிய, ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நிகழ்த்தியது. தொடர்ந்து, நிர்பய், சவுரியா போன்ற ஏவுகணைகளும் வெற்றிக்காரமாக சோதிக்கப்பட்டதோடு, சவுரியா ஏவுகணை தற்போது இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ள டிஆர்டிஓ, தற்போது மிக மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை முழுமையாக உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.
ருத்ரம்-1 என்ற இந்த ஏவுகணை ஒடிசாவில் உள்ள பலசோர் கடற்கரையில் இருந்து சுகோய் -30 போர் விமானத்தின் மூலம் வெற்றிகரமாக இன்று காலை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) போர் விமானங்களுக்கு வான்வெளியில் சிறப்பாக செயலாற்ற உதவும்.
இது முதன்மையாக எதிரிகளின் வான் பாதுகாப்புகளை முடக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரி நாடுகளின் கண்காணிப்பு ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அழிப்பதற்காக பல உயரங்களில் இருந்து ஏவப்படும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை ரேடாரால் கண்டறிய முடியாது. அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளே இத்தகைய ரேடார் எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்துள்ளன.
இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.