நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் தென்னாப்ரிக்க வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியிருப்பது, விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி., அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 2020ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிசிசிஐ-யின் பல கட்ட முயற்சிக்கு பிறகு வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது.
இந்த சூழலில், ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாமல் ரசிகர்களை ஏமாற்றி வரும் விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி., அணி, ஒவ்வொரு முறையும் இதயங்களை மட்டுமே வென்று தொடரிலிருந்து வெளியேறுவதை தவிர்த்து இம்முறை ஆவது கோப்பையை கைப்பற்றிட வேண்டும் என்ற தீவிர முனைப்பில் உள்ளது. இதற்காக வலுவான அணியை கட்டமைக்க ஏலத்தில் தென்னாபிரிக்க அணி வீரர்களை தங்கள் பக்கம் கோடிகளை கொட்டி வளைத்து போட்டது. ஆனால், தற்போது தென்னாபிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. ஆண்டு இறுதிவரை வெளிநாட்டு பயணங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த சிக்கலை கலைந்து அவர்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்துவர ஐபிஎல் நிர்வாகம் முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், மற்ற வீரர்களின் பாதுகாப்பு கருதி தொடக்கத்தில் சில போட்டிகளில் அவர்கள் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்குத்தான் பெரும் பாதிப்பாக அமையும் என கருதப்படுகிறது.
ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையை, விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை நம்பித்தான் உள்ளது. இந்த சூழலில் டிவில்லியரஸ் இல்லாவிட்டால் அணியின் பேட்டிங் ஆர்டர் பாதிக்கும். மேலும், ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் ஆகியோரும் ஆர்சிபி அணியில் உள்ளனர். கிறிஸ் மோரிஸை இந்த சீசனுக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து ஆர்வத்துடன் எடுத்தது ஆர்சிபி அணி. இந்நிலையில், அவர்கள் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால் அது ஆர்சிபி அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். ஏற்கனவே கோப்பையை வெல்லாத விரக்தியில் இருக்கும் ஆர்சிபி அணி, முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில், இப்படி மட்டும் நடந்தால், இந்த வருடமும் ஆர்.சி.பி அணிக்கு ரசிகர்களின் அன்பு மட்டுமே கிடைக்கும் என மற்ற அணி ரசிகர்கள் இணையத்தில் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.