ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றிய ஆர்.சி.பி அணி இன்று மாலை பெங்களூருவில் வெற்றி பேரணி நடத்த உள்ளது.

10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணியில் பில் சால்ட்டும் விராட் கோலியும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய பில் சால்ட், 9 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களில் ஜேமிசன் வேகத்தில் ஷ்ரேயாசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயங்க் அகர்வாலும் அதிரடி காட்டினார். 18 பந்துகளில் 1 சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்திருந்த போது, சாகல் சுழலில் அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து மயங்க அகர்வால் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

கேப்டன் ரஜத் பட்டிதார் தன் பங்குக்கு 16 பந்துகளில் 26 ரன்கள் விளாசி ஆட்டமிழக்க, லிவிங்ஸ்டன் 15 பந்துகளில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி, 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போது, அஸ்மத்துல்லா வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்று அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜித்தேஷ் ஷர்மா 10 பந்துகளில் 2 சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும், ரொமரியோ ஷெப்பர்ட் 9 பந்தில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் பெங்களூரு அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து, இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. ஒருகட்டத்தில் 210 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.

பின்னர் சவாலான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிராப்சிம்ரன் சிங் வழக்கம் போல அதிரடி காட்டினர். பஞ்சாப் அணியின் ஸ்கோர் 43 ரன்களாக இருந்த போது ஹேசில்வுட் வீசிய ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு துரத்திய பிரியான்ஷ் ஆர்யா பில் சால்ட்டின் அபாரமான கேட்சால் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ் அதிரடி காட்டினார். 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த பிராப்சிம்ரன் குருனால் பாண்ட்யாவின் பந்தில் புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ரோமோரியோ ஷெப்பர்ட் வேகத்தில் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். நேஹல் வதேரா 15 ரன்கள், ஸ்டோய்னிஸ் 6 ரன்கள் அஸ்மத்துல்லா 1 ரன்னில் என அடுத்தடுத்து வெளியேற ஷசாங்க் சிங் அதிரடியாக விளையாடினார்.
கடை சி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹேசில்வுட் வீசிய அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. இதனால் பெங்களூரு அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அப்போதே விராட் கோலி கண்கள் கலங்கி மிகவும் எமோஷனலாகக் காணப்பட்டார். பின்னர் மூன்றாவது பந்தில் சிக்சர், நான்காவது பந்தில் பவுண்டரி, ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தில் சிக்சர் விளாச 22 ரன்கள் எடுக்கப்பட்டதால், பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. வெற்றிக் களிப்பால் பெங்களூரு வீரர்களும் ரசிகர்களும் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். மைதானத்திற்கி வெளியேயும் உள்ளேயும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

இந்த இறுதிப் போட்டியைக் காண்பதற்காக, பெங்களூரு அணியின் முன்னாள் வீரர்களான ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் நேற்று அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணி வீரர்களுடன் இணைந்து கொண்டனர். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள பெங்களூர் அணி ஐபிஎல் தொடங்கி 18 வது ஆண்டில் தான் அவர்களின் கோப்பைக் கனவு நனவாகி உள்ளது. இதனால் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற டிவில்லியர்ஸ் மற்றும் கெயில் ஆகியோர் பெங்களூர் அணி வீரர்களுடன் இணைந்து கோப்பையை உச்சி முகர்ந்தனர். பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதைக் காண்பதற்கு நேரில் வருவேன் என்று டிவில்லியர்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடிய அனைத்து இறுதிப் போட்டியிலும் அவர் விளையாடிய அணியே வெற்றி பெறும் என்பது நேற்றும் தொடர்ந்தது. இறுதிப் போட்டியில் தோல்வியே சந்திக்காத வீரராக ஜோஷ் ஹேசில்வுட் இருக்கிறார். பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே தனது அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து தான் ஒரு வெற்றிகரமான கேப்டன் என்பதைப் பதிவு செய்துள்ளார். ஆர்.சி.பின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இன்று மாலை 3.30 மணியளவில் பெங்களூரு விதான சவுதா முதல் சின்னசாமி ஸ்டேடியம் வரை வெற்றிப் பேரணி நடைபெற உள்ளது.