குஜராத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா பீச் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டு வீரர்கள் சாதித்துள்ளனர்.

மே 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை டையூ, டாமன், குஜராத்தின் அழகிய கடற்கரைகளில் கேலோ இந்தியா பீச் விளையாட்டு போட்டி 2025 நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ) மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழ்நாடு செபக்தக்ரா அணியைச் சேர்ந்த, ஆர்.பிரேமநாதன், எம்.ஜீவிதுரை விக்னேஷ், ஏ.வினாயகநரேந்திரமூர்த்தி, எஸ்.ஏ.சக்தி விக்னேஷ், எஸ்.சிவகுரு, எஸ். ஹனுமோந்த், எஸ். அர்ஜுன் பிரசாத், அனூஷ், சபரிவேல் மகாராஜா, எம். ராஜன், ஆர். விக்னேஷ் ஆகிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்திய விளையாட்டு ஆணையம் நடத்தும், பல்வேறு கடற்கரை விளையாட்டுகளில், குறிப்பாக பீச் செபக்டக்ரா, பீச் கபடி, பீச் வாலிபால், பீச் சாக்கர் மற்றும் ஓபன் வாட்டர் ஸ்விம்மிங்கில், நமது மாநில வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டிகளில் மே 20 ஆம் தேதி தமிழ்நாடு ஆண்கள் செபக்டக்ரா அணி, டீம் ட்ரையோ பிரிவில், இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்தது. முதலில் மே 20 ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானை எதிர்த்து வெண்கலப் பதக்கம் வென்றது. மே 22 ஆம் தேதி மீண்டும் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானை எதிர்த்து கடும் போட்டிக்கு இடையே 2வது முறையாக வெண்கலப் பதக்கம் வென்றது.
தங்களை வெளி மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளுக்கு ஆர்வத்துடன் பங்கேற்க வைத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும், தமிழ்நாடு செபக்டக்ரா சங்கத்தின் தலைவர் மகேஷ் பாலா அருணாசலம், செயலாளர் டி.பாலமுருகன், பயிற்சியாளர் கண்ணன், அணித் தலைவர் மகேஷ் ஆகியோருக்கு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் நன்றி தெரிவித்தனர். அரசும், தனியார் துறையும் அதிக அளவில் ஆதரவு வழங்கினால், தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல இளைஞர்களை அடையாளம் கண்டுபயிற்சி அளித்து, திறமையை வளர்க்க முடியும் என்றும் கோரிக்கை வைத்தனர்.




