ஹாட்ரிக் வெற்றியை தக்க வைக்குமா சேப்பாக்கம் அணி 7-வது ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது கடந்த 12-ந்தேதியன்று கோவை நகரில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் என அட்டவணைகள் போடப்பட்டு உள்ளது.நாளைய போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடனே திகழ்கிறது. பிரதோஷ் ரஞ்சன்பால், பாபா-அபராஜித், சஞ்சய் யாதவ், கேப்டன் ஜெகதீசன், ஹரீஸ்குமார், ரகீல்ஷா போன்ற சிறந்த வீரர்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் உள்ளனர். கோவை கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 70 ரன்னில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் கடைசி பந்தில் தோற்றுப்போனது. அந்த அணி 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. கோவை அணியில் சாய் சுதர்ஷன், கேப்டன் ஷாருக்கான் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். சாய் சுதர்ஷன் 2 ஆட்டத்தில் 2 அரைசதத்துடன் 176 ரன்கள் எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.