உலக பேட்மிண்டனில் இருந்து விலகுவதாக பேட்மிண்டன் வீராங்கனை சிந்து தெரிவித்துள்ளார்.
27வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்டு 22ம் தேதிமுதல் ஆகஸ்டு 28ம் தேதிவரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை வாங் ஸியுடன் (சீனா) மோதவிருந்தார்.இந்நிலையில், உலக பேட்மிண்டன் இருந்து விலகுவதாக பி.வி.சிந்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றேன். இந்த தொடரின்போது காயத்தால் அவதிப்பட்டேன். ஆனால் சமாளித்து வெற்றி பெற்றேன்.
இறுதிப்போட்டியின் போது வலி அதிகமாக இருந்தது. ஐதராபாத் திரும்பியதும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பார்த்தேன். அதில் இடதுகால் பாதத்தில் அழுத்தத்தால் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சில வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து துரதிர்ஷ்டவசமாக விலக வேண்டியதாகிவிட்டது. உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி” என்று கூறியுள்ளார். 27வயதாகும் பி.வி.சிந்து கடந்த 2019ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.