ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.
ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் ஆட்டங்கள் நேற்று தொடங்கிய நிலையில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதல் பிளே ஆஃப் ஆட்டத்தில் விளையாடின.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சைத் தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்கத் திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாயினிஸ் 17 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார். தொடக்க ஆட்டக்காரர் பிராப்சிம்ரன் 10 பந்துகளில் 18 ரன்களும், அஸ்மத்துல்லா 12 பந்துகளில் 18 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்ட 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே சேர்த்தது.
பின்னர் ஆடிய பெங்களூரு அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. சேஸ் மாஸ்டர் விராட் கோலி முதல் ஓவரிலேயே பவுண்டரிகளாக அடித்து அமர்க்களப்படுத்தினார். எனினும் அவரது அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 12 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் களமிறங்கிய மயங்க் அகர்வால் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த போது, முஷீர் கான் பந்தில் ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அரை சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், 10 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக மூன்று விக்கட்டுகளை வீழ்த்திய சுயாஷ் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் வாயிலாக பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது.
இன்று குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையே எலிமினேட்டர் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் தோற்கும் அணி போட்டித்தொடரிலிருந்தே வெளியேறும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. இதில் வெற்றி பெறும் அணியுடன் பஞ்சாப் அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.




