மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இரண்டாவது சூப்பர் ஓவரில் அற்புதமாய் பீல்டிங் செய்த மயங்க் அகர்வாலுக்கு ஜான்டி ரோட்ஸ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்றிரவு நடந்த 36 வது லீக் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. பின்னர் 177 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து சமன் செய்தது.இதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறையில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 5 ரன்னுக்கு 2 விக்கெட்டையும் இழந்தது. பும்ரா சிறப்பாக பந்து வீசி பஞ்சாப் அணியை 5 ரன்களில் கட்டுப்படுத்தினார். பின்னர் 6 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியும் 5 ரன் மட்டுமே சமி வீசிய அந்த ஓவரில் எடுத்தது.
சூப்பர் ஓவரும் சமன் ஆனதால் யார் வெற்றி என்ற முடிவை பெற மீண்டும் சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. 2-வது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த மும்பை அணி 11 ரன்கள் எடுத்தது. இதில் பொல்லார்ட் தூக்கியடித்த கடைசி பந்தை மயங்க் அகர்வால் எல்லைக்கோட்டின் அருகே சிக்சருக்கு போக விடாமல் மிக உயரமாக பறந்து தடுத்தார்.இதனால் 4 ரன்களை மிச்சப்படுத்தி மும்பை அணியின் ரன் எண்ணிகையை கட்டுப்படுத்தினார்.அதன் பிறகு கிறிஸ் கெயில் மற்றும் அகர்வால் அதிரடியை வெளிப்படுத்தி பஞ்சாப் அணி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதுபற்றி பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளர், முன்னாள் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த பீல்டரான ஜான்டி ரோட்ஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இதனை நாங்கள் முன்பே பயிற்சி செய்துள்ளோம். எல்லைக்கோடு பகுதியில் பந்துகளை பிடிப்பதும், பின்பு திரும்பி உள்ளே வீசுவதும் என்று வீரர்கள் இதற்காக நிறைய நேரம் செலவிட்டு இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
பொல்லார்டு போன்றவர்கள் பேட்டிங் செய்யும் பொழுது, பீல்டிங் எப்படி செய்தல், பௌண்டரிக்கு பந்து எவ்வாறு செல்லாமல் எப்படி தடுத்தல் என்பது பற்றியும் நாங்கள் பேசியுள்ளோம். உண்மையில் சிறந்த முறையில் மயங்க் அகர்வால் செயல்பட்டார்.இது ஒரு சிறந்த திறமையாகும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.