ஒரு சிங்கிள் கிளிக்கில் புகழின் உச்சம் தொடும் டிஜிட்டல் யுகம் இது. சினிமா, அரசியல் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் கலாய்த்து ‘யூ டியூப்’ இணையதளத்தில் அதகளம் செய்கிறார்கள் ‘ஸ்மைல் சேட்டை’ மற்றும் ப்ளாக் ஷிப் டீம். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வேலைதேடி சென்னைக்கு வந்த பட்டதாரி இளைஞர்களால் உருவாகியிருக்கிறது இந்த டீம். சமூகப் பிரச்சனைகளை நகைச்சுவையோடு தந்து சிந்திக்க வைப்பதுதான் இவர்களின் ஸ்பெஷல். இதில் முக்கியமானவர் ஆர்.ஜே. விக்னேஷ். திறமை இருந்தால் உருவம் தோற்றமும் , நிறமும் முக்கியமில்லை என நிரூபித்துக் காட்டியுள்ளார், விக்கி.
“பி.இ முடிச்சிருக்கேன். 2011ல் ஆஹா எப்.எம்.யில் ஆர்.ஜேவாக அறிமுகம் ஆனேன். அதே நேரத்தில் புதியதலைமுறை வார இதழில் நிருபர் பணியிலும் சேர்ந்தேன். ஒரே நேரத்தில் 2 தளத்திலும் வேலை பார்த்தன் மூலம் பல தரப்பு மக்களின் அறிமுகம் கிடைத்தது. இயற்கையாகவே கலாய்த்து பேசும் எனக்கு ஆர்.ஜே வேலை திருப்தியளிக்க, அந்த நேரத்தில் புதிய தொலைக்காட்சி வாய்ப்பும் கதவை தட்டியது. வார இதழை போல் தொலைக்காட்சியிலும் சிறப்பாக பணியாற்றினாலும், ஆர்.ஜே வேலை என்னை வெகுவாக ஈர்த்தது. அந்த நேரத்தில் டிவி வேலையை விடாமல் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து கொடுக்க ஆரம்பித்தேன். இதன் மூலம் பல தொலைக்காட்சியிலிருந்து அழைப்பு வந்தது. இதன் தொடர்ச்சி தான் யூ டியூப் சேனல் எனும் விக்னேஷ்க்கு அவரது நண்பர் ஹிப்ஹாப் ஆதி மூலமாக மீசையை முறுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது”.
முதலில் லோக்கல் சேனலில் வீ.ஜே ஆகணும்னுதான் ஆசை இருந்துச்சு. நான்லாம் வீ.ஜேவுக்கு ஃபோன் பண்ணி “உங்கள ரொம்ப புடிக்கும் மேடம், சூப்பரா பண்றீங்க”னு சேட்ட பண்ற வகை. ‘சன் மியூசிக்’ சேனலுக்கு கால் பண்ணிட்டு எத்தனையாவது கால்னு எண்ணிக்கிட்டு இருப்பேன். ஒரு முறை லோக்கல் சேனலுக்கு ஆடிஷனுக்கு போயிருந்தப்ப, அங்க ஒருத்தர் “நீ நல்லா பண்ற தம்பி, ஆனால், உன் உருவமும் நிறமும் இதுக்கு ஒத்துவராது, உன் திறமையை ரேடியோவுல காட்டு”னு சொன்னாரு, அப்புறம்தான் நான் ஆர்.ஜே ஆகணும்னு நினைச்சேன்.
“இப்ப சொன்னா அதெல்லாம் ஓவரா இருக்கும். அப்போ அது கஷ்டமான விஷயம்தான். அதுவும் நம்ப அளவே திறமை இருக்க ஒருத்தர் உருவத்தால் மட்டுமே மேல போகுறத பாக்குறது ரணமா இருக்கும். விடிந்ததும் தொலைக்காட்சியை போட்டதும் என்னுடைய நிகழ்ச்சி தான் வரும். காலையிலேயே இந்த முகத்தை பார்த்தா விளங்குமான்னு பல பேரு என் காதுப்படவே சொல்லி இருக்காங்க. ஆனால், அதெல்லாம் தாண்டி உங்கள நீங்க நம்பும்போதுதான் பாசிட்டிவிட்டி கிடைக்கும். ஒன்னு கிடைக்கலைனா அதை நம்மளே உருவாக்கணும்னு எண்ணம் வரணும் என்கிறார், எனர்ஜி டானிக் விக்னேஷ் காந்த்.
சமூகத்தின் அவலங்களை யூடியூப் சானலில் சொல்றோம். வரவேற்பு இருக்கிற அதே சமயத்தில் எதிர்ப்பும் இருக்க தான் செய்யுது. என்ன பண்றது மக்களின் குமுறல்களை யூடியூப் சேனலில் போட்டா சும்மா விடுவாங்களா என்ன. மழை வெள்ளத்தில் செய்தி தொலைக்காட்சிகள் கொடுத்த செய்திகளை ஒவ்வொரு சிறப்பு செய்தியாளர்கள் பேசுற மாதிரி பேசினோம். அப்போ செம ரெஸ்பான்ஸ். தொலைக்காட்சி செய்தியாளர்கள் அவர்களையும் மீறி பதட்டதுக்கு உள்ளானதை வெளிப்படுத்திய பதிவை ரமணா ஸ்டைலில் வெளிப்படுத்தியதுக்கு செம கிளாப்ஸ் அள்ளுச்சு. தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தாமல், விமர்சிப்பது தவறில்லை என்கிறது யூடியூப் சேனல்.
‘‘ஆரம்பத்துல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கலாய்த்து ‘‘சொல்வதெல்லாம் பச்சை பொய்’னு ஒரு வீடியோ பண்ணினோம். அது பெரிய ஹிட். தொடர்ந்து பண்ணும்போது, டி.வி. சேனல்ல இருந்து நிகழ்ச்சி பண்ணித்தரச் சொல்லி அழைப்பு வந்துச்சு. என்னிடம் இருந்த டீம் அப்போ வரைக்கும் பணம்ங்கிற விஷயத்தைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை.. அதனால வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டோம். ஓரளவு பொருளாதாரத் தேவை பூர்த்தியானது.
அந்த நேரம்தான் யூ டியூப்பில் சேனல் தொடங்கி சிலர் பட்டையக் கிளப்பிக்கிட்டிருந்தாங்க. ‘யூ டியூப் சேனல்’ ஒரு நல்ல மார்க்கெட் டாகவும் இருந்துச்சு. அதை நாமளும் பயன்படுத்திக்கலாம்னு எங்க டீமோட காட்ஃபாதர் சுட்டி அரவிந்த் வழிகாட்ட 2016ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி ‘ஸ்மைல் சேட்டை’ யைத் தொடங்கினோம்.
வட மாநிலங்களில் நையாண்டி புரோகிராம் அதிகம். தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிகழ்ச்சியை யாரும் செய்யலை. அப்படியே செய்தாலும். அது ஒருதலைப்பட்சமாக இருந்தது. தேர்தலை மையமாக வைத்த நிகழ்ச்சிக்கு ‘தி பீப் ஷோ’ என்று பெயரிட்டோம். டிசம்பர் மாத பெரு வெள்ளம் சென்னையை ஒரு காட்டு காட்டி ஓய்ந்த நேரம். அப்போது அரசியல் கட்சிகள் செய்த ஸ்டிக்கர் மேட்டரில் தொடங்கி அறிக்கை விட்டது வரை ஒரு விஷயத்தையும் விடாமல் கிண்டல் செய்து வீடியோ பண்ணினோம். சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க ப்ளாக் ஷிப் யூடியூப் சேனல் உருவானது. ஸ்மைல் சேட்டை, பிளாக் ஷிப் யூடிப் சேனல், ஆர்.ஜே, வி.ஜே, திரைப்பட வாய்ப்பு என அனைத்திலும் சொல்லி அடித்துள்ளார், கில்லி விக்னேஷ்காந்த். திறமையை நம்புங்கள்… அது தான் உங்களை வெற்றியை நோக்கி ஓட வைக்கும் என்கிறார், இந்த அசாத்திய கலைஞன்.