அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனவரி 20ஆம் தேதி ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளார் கமலா ஹாரிஸ். முந்தைய அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜோ பைடன் அதிபராக பதிவியேற்றதும் முன்னாள் அதிபர் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகி இருந்தது. அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். உலக சுகாதாரக் கூட்டத்திலும் அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் அகதிகள் நுழையாத வகையில் ட்ரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுதவி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தின் போது, வெளியேறியது. அந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
தனது பதவியேற்பு உரையில், ”பயங்கரவாதம், வெள்ளையர்களின் மேலாதிக்கம், உள்நாட்டு தீவிரவாதம் போன்றவற்றை எதிர்த்து நின்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும். உலகத்தில் நன்மையை ஏற்படுத்துவதற்கான சக்தியாக அமெரிக்காவை மீண்டும் ஏற்படுத்த முடியும்” என்று கூறினார்.