தொலைக்காட்சி விளம்பரங்கள் வியாபாரத்தின் தூண்கள். ஆனால் அவற்றில் சில நமக்குள் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. பாசிங் கிளவுட்ஸ்கள் அல்ல விளம்பரங்கள்… அவற்றுள் சில நம் மேல் பரவச மழை பொழிய வைக்கும் என்பதில் ஐயமில்லை. அவற்றுள் சில…

பொதுவாக ஊடகத்துறையில் விளம்பரம் என்பது மிக முக்கியமான ஒன்று. சுருங்கச் சொன்னால் விளம்பரங்கள்தான் ஊடகங்களின் ஊட்டச்சத்து. விளம்பரங்களின் வருமானம் தான் ஊடகங்கள் தொடர்ந்து செயல்பட பேருதவி புரிகின்றன. எனவே அந்த விளம்பரங்கள் ஊடகத்துறையின் முக்கிய அங்கம். அந்த விளம்பரங்கள் தயாரிப்பது என்பது மிகவும் சவாலான பணி.
3 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் ஓடும் ஒரு திரைப்படத்தில் சுவாரஸ்யங்கள் நிறைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. தொலைக்காட்சி தொடர்களிலோ, குறும்படங்களிலோ சுவாரஸ்யங்கள், ஆச்சரியங்கள் இருப்பதும் பெரிதில்லை. ஆனால் சில விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய விளம்பரப் படங்களை எல்லோருக்கும் சுவாரஸ்யமாக தயாரிப்பது என்பதுதான் மிகவும் சவாலான பணி.

காட்சிப் பின்புலம், அதில் நடிக்கும் மாடல்கள், இசை, வசனம், என ஒவ்வொன்றிற்கும் மெனக்கெட வேண்டியிருக்கும். இல்லையென்றால் அந்த விளம்பர படம் சொதப்பலாய் இருக்கும். மேலும் விளம்பரப் படங்களில் வேறு ஒரு சவால் உள்ளது. திரும்ப திரும்ப ஒளிபரப்பப்படும். ஒரே சேனலில் ஒரு நாளைக்கு பத்து இருபது முறைகள் கூட ஒளிபரப்பப்படும். அப்படி திரும்ப திரும்ப பார்த்தாலும் நேயர்களுக்கு சலிப்புத்தட்டக் கூடாது என்றால் எவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டும் விளம்பரப் படங்கள் தயாரிக்க?…
ஊடகத்துறையின் அட்சயப் பாத்திரமான விளம்பரத்துறையில் காசு பணத்தை தாண்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த எண்ணற்ற விளம்பரங்கள் உள்ளன. சில விளம்பரங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்கும். ஆனால் அவற்றை இப்போதும் நாம் நினைவில் வைத்திருப்போம். சில விளம்பரங்களில் வரும் வார்த்தைகள் நமக்கு புது உத்வேகத்தைக் கொடுக்கும். அதற்காகவே அந்த விளம்பரம் எத்தனை முறை ஒளிபரப்பப்பட்டாலும் நாம் அதை சுவாரஸ்யமாக பார்ப்போம்.
சில விளம்பரங்களில் வரும் இசை, அல்லது அதில் நடித்திருக்கும் நபர்கள், குழந்தைகள் என்றால் அவர்களின் குறும்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம்மை கவர்ந்திருக்கும். அப்படிப்பட்ட விளம்பரங்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
3 ரோசஸ் டீ தொடர்பான ஒரு விளம்பரம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக அனைவரையும் விலிகியிருக்கச் சொல்லி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இதை தொடர்புபடுத்தும் விதத்தில் அந்த விளம்பரப்படம் தயாரிக்கப்பட்டிருக்கும். ஒரு பெண் டீ தயாரித்துக் கொண்டிருப்பார். மூன்று கோப்பைகள் இருக்கும். அப்போது அவரது கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்ப வந்திருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் பற்றி சொல்லிக் கொண்டிருப்பார்.
ஒரு மாதத்திற்கு அந்தப் பக்கமே போகக்கூடாது என்பார். அப்போது எதேச்சையாக மூன்று கோப்பைகள் இருப்பதை பார்த்துவிட்டு… நாம் இருவர் தான் இருக்கிறோம் என்ற கோணத்தில் மூன்றாவது கோப்பை யாருக்கு? என்று கேட்பார். அப்போது அந்தப் பெண் பக்கத்து வீட்டுக்காரரின் பெயரைக் குறிப்பிட்டு.. அருணுக்குத் தான்… என்று கூறிவிட்டு… அவரிடம் இருந்து விலகியிருக்கத் தான் சொல்லியிருக்காங்க… ஒட்டுமொத்தமா ஒதுக்கிவைக்க சொல்லல என்பார்… பேக்ரவுண்டில் 3 ரோசஸ் ஒற்றுமையின் சுவை. இந்த சில நொடி விளம்பரப் படத்தில் பெரிய செய்தி சொல்லப்பட்டிருக்கும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்பது தான் அந்த செய்தி. சில நொடிகளில் யாருக்கும் போரடிக்காமல் மிக நேர்த்தியாக ஒரு மாபெரும் செய்தியை சொல்லும் அந்த விளம்பரம்.
இதே போல் பல வருடங்களுக்கு முன்பு கோஹினூர் பாசுமதி அரிசிக்காக ஒரு விளம்பரம் தயாரிக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு சீனத்தம்பதியினர் பாகிஸ்தானில் குடியிருப்பர். அவர்கள் உணவு, கலாச்சாரம் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால் அவர்களிடம் அண்டை வீட்டுக்காரர்கள் யாரும் நெருங்கிப்பழக மாட்டார்கள். அவரின் கணவர் அந்தப் பெண்ணிடம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்பை ஏற்படுத்திக்கொள் என்று கூறுவார்.

உடனடியாக அந்தப் பெண் பாகிஸ்தானிய உணவான பிரியாணி சமைப்பது பற்றி தெரிந்து கொண்டு அதையே சமைத்து பக்கத்து வீட்டிற்கு எடுத்துச்செல்வார். அதுவரை அந்த சீனப்பெண்ணிடம் பேசாத பக்கத்து வீட்டுப்பெண் பிரியாணி வாசத்தில் மெய் மறந்து அந்தப் பெண்ணை வீட்டிற்குள்ளே அழைத்துச் செல்வார். அந்தக் குடும்பத்தில் பெண்கள் அனைவரும் அந்தச் சீனப்பெண்ணிடம் அன்பை பொழிவார்கள். இந்த விளம்பரத்தில் நாடு, மொழி, இனம், கலாச்சாரம் மறந்து அன்பை பகிர வேண்டும் என்ற நெகிழ்ச்சியான செய்தியை மிகச்சுவையாக சொல்லியிருப்பார் அந்த விளம்பரத்தின் இயக்குநர்.
ஆம்வே தயாரிப்பான ATTITUDE என்ற பொருளுக்காக சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் ஆங்கில மொழியில் ஒரு விளம்பரம் தயாரிக்கப்பட்டிருக்கும். அந்த விளம்பரத்தில் அழகுப்போட்டியில் கலந்து கொண்டுள்ள ஒரு பெண் கேட்வாக் நடப்பார். அப்போது அவருடைய ஹீல்ஸ் உடைந்துவிடும். எல்லோரும் கை கொட்டிச் சிரிப்பார்கள். ஆனால் அந்தப் பெண் மற்றவர்கள் கை கொட்டுவதை கை தட்டுவதாக எடுத்துக்கொள்வார். தானும் கை தட்டிக்கொண்டே எழுவார். மற்றொரு செருப்பையும் கழற்றிவிட்டு வெறுங்காலில் கம்பீரமாக நடந்து செல்வார். பின்னணியில் அழகு நம் அணுகுமுறையை பொறுத்தே… என்ற வாசகம் ஒளிரும்….
ATTITUDE என்பது ஒட்டும் பசைக்கான விளம்பரம். இந்த விளம்பரத்திற்கும் அந்தப் பொருளுக்கும் தொடர்பே இல்லாதது போல் தோன்றும். உடைந்த ஹீல்சை இந்தப் பசை கொண்டு ஒட்டலாம் என்பதற்காகத்தான் இந்த விளம்பரம். ஆனால் அதை ஒரு Motivation கருத்தோடு படமாக்கியிருப்பதில் தான் அந்த இயக்குநரின் திறமை அடங்கியிருக்கிறது. அதனால் தான் பதிமூன்று வருடங்கள் கழித்தும் அந்த விளம்பரம் நம் நினைவில் இருக்கிறது.

ஹமாம் சோப் விளம்பரம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெண்களை கோழைகளாக வளர்க்காமல் அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டவேண்டும் என்னும் நோக்கில் இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டிருக்கும். சந்தையில் பொருட்கள் வாங்கச் சென்ற ஒரு அம்மா, தனது மகளை வாகனத்தில் ஏற்றாமல் ஓட விடுவார். அந்த சிறுமியும் அம்மாவைப் பிடித்துவிட ஓடுவாள் ஒரு கட்டத்தில் மகளுக்காக வண்டியை நிறுத்திவிட்டு அந்த அம்மா சொல்லும் வார்த்தைகள் தான் இன்ஸ்பிரேசன்.
யாராவது உன்னை வம்புக்கிழுத்தா ஓடு, குதி, துரத்து ஆனா அவங்களை சும்மா விடாதே என்று தன் மகளுக்கு அவர் அறிவுரை சொல்லும் தொணி நம் மகளுக்கு நாமே அறிவுறை சொல்வது போல் இருக்கும். நம் மகளையும் இதே போல் தைரியமுள்ளவளாக வளர்க்க வேண்டும் என்று எண்ணத் தோன்றும். இப்படி சில நொடிகள் மட்டுமே ஓடும் ஒரு விளம்பரப் படத்தில் நேரிடையாக தங்களுடைய பொருட்களை முன்னிலைப்படுத்தாமல் மக்களுக்கு மெசேஜ் சொல்லும் தைரியம் அந்த இயக்குநர்களுக்கு இருக்கிறது என்றால் அதை அனுமதிக்கும் நிறுவனங்களுக்குத் தான் மிகப்பெரிய புண்ணியம்.
இதே போல் சுமார் பத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னால் வந்த ஒரு விளம்பரம் ராஜ்மஹால் ஜவுளிக்கடை விளம்பரம். தமிழ்நாட்டில் மாமியார் மருமகள் உறவு என்பதையே சர்ச்சைக்குள்ளானதாக உருவகப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் வெளியான இந்த விளம்பரத்தில் தன் வீட்டிற்கு வரும் மருமகளை திருமகளாக பார்ப்பார்கள். ராஜ்மஹாலின் பட்டு உடுத்தி… சுற்றும் பூமியை கொஞ்சம் நிறுத்தி… என்று தொடங்கும் உற்சாகமான பாடலில் வரும் வரிகள், ஒவ்வொன்றும் பெண்ணின் பெருமையை உயர்த்திக் கூறியிருக்கும். அந்த துள்ளல் பாடல் இப்போதும் நம் நினைவை விட்டு நீங்கவில்லை என்றே சொல்லலாம்.
முக்கியமான மெசேஜ் சொல்லும் விளம்பரங்கள் மட்டுமல்ல, ஏதோ ஒரு வகையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக 11 வருடங்களுக்கு முன்பு வெளியான பைக் விளம்பரம் ஒன்று இன்றுவரை பிரபலம். பஜாஜ் நிறுவனத்தின் காலிபர் பைக் விளம்பரம் தான் அது. அந்த விளம்பரத்தில் வந்த வசனங்கள் யாருக்கும் நினைவு இருக்காது. அதில் நடித்த நபர்களை நாம் மறந்திருப்போம். ஏன் அந்த விளம்பரத்தில் வந்த பொருள் கூட நம் நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே…. ஆனால் அந்த விளம்பரத்தில் வந்த ஹூடிபாபா ….ஹூடிபாபா என்று பாடல் இன்றுவரை மறக்காது.
90ஸ் கிட்ஸ் தங்கள் குழைந்தைப் பருவத்தில் எல்லா தருணங்களிலும், ஹூடிபாபா என்ற பாடலைப் பாடிக்கொண்டிருப்பார்கள்…. ஏன் இன்றும் கூட 90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் விளம்பரம் ஹூடிபாபா….
இதே போல் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியானது டைடன் வாட்ச் விளம்பரம் ஒன்று. ஓய்வு பெறும் கல்லூரி பேராசியருக்கு மாணவர்கள் ஒரு பரிசு கொடுப்பார்கள். அந்த விளம்பரத்தில் வார்த்தைகள் எதுவும் இருக்காது. மாணவர்கள் தங்கள் கைகளில் இருக்கும் பொருட்களை கொண்டு இசைப்பார்கள். அந்தப் பின்னணி இசையில் ஒரு மாணவி பரிசை ஆசிரியரிடம் கொடுப்பார். அவர் அந்தப் பரிசை பிரித்துப் பார்க்கும் பரவசம், அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் நம்மையும் அந்த மாணவக் கூட்டத்தில் ஒருவராக உணரவைக்கும். இது தான் வெற்றி. யாரோ ஒருவரின் கற்பனையில் நாம் கரைந்து போகிறோமே… யாரோ நடக்கும் பாதையில் நம்மை அறியாமல் நாமும் பின் தொடர்ந்து போகிறோமே… இந்த மேஜிக்கை மிகச்சரியாக செய்யும் விளம்பரங்கள் காலம் கடந்தும் நிற்கின்றன.
எமோஷனலான விளம்பரங்களும் நேயர்களின் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாகிவிடுவது இயல்புதான். ஏதோ ஒரு பொருளை யாரோ ஒருவருக்கு விற்பதற்காக தயாரிக்கப்படும் ஒரு விளம்பரம் அந்த பொருளுக்கான நுகர்வோரையும் தாண்டி பொதுக் கவனம் பெற்று விடுகிறது அல்லவா. அப்படி ஒரு விளம்பரம் வெளியாகி பொதுக் கவனத்தை பெற்றுள்ளது.
ஆக்சிஸ் வங்கி விளம்பரம் தான் அது. கர்ப்பிணி பெண் ஒருவர் வங்கிக்கு வருகிறார். வங்கி அடைக்கப் போகும் நேரம். அவர் செல்போனில் பேசிக் கொண்டே வருவதால் வங்கி அடைக்கப்படுவதை கவனித்திருக்க மாட்டார். ஆனால் அந்த காவலாளி அந்தப் பெண் வருவதைப் பார்த்துவிட்டு கதவுகளை மீண்டும் திறப்பார். உள்ளே இருக்கும் அதிகாரி ஏன் என்பதைப் போல் பார்ப்பார். அவர் சைகையால் பெண் வருவதை உணர்த்துவார். அந்த அதிகாரியும் புன்னகைத்துக் கொண்டே தன் இருக்கைக்கு சென்று அமர்வார். அப்போது பேக்ரவுண்டில் எங்கள் கதவுகள் உங்களுக்காக முழு மனதோடு ஓபன் என்ற வசனம் ஒலிக்கும்.
நம் சகோதரியோ, நம் தோழியோ அல்லது நமக்கு தெரிந்த பெண்ணோ வயிற்றைத் தூக்கிக்கொண்டு அங்கு செல்வதைப்போல நினைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணை கரிசனையோடு நடத்தும் காவலாளிக்கும், வங்கி அதிகாரிக்கும் மானசீகமாக நாம் நன்றி சொல்வோமே! அது தான் தயாரிப்பின் வெற்றி. அது தான் அந்த இயக்குநரின் திறமை.. தனித்துவம்..
எமோசனலையும் தாண்டி சில விளம்பரங்கள் நம் நினைவில் இன்றும் பசுமையாக இருக்கும்.
இருபது வருடங்களுக்கு முன்பு ரேடியோவில் நாம் கேட்டு ரசித்த வாஷிங் பவுடர் நிர்மாவாகட்டும், அண்மையில் வெளியான உதய்கிருஷ்ணா நெய் விளம்பரத்தில் குழந்தைகள் பாடும் இன்னும் கொஞ்சம் ஊத்து பாடலாகட்டும்… பிந்து அப்பளம் விளம்பரத்தில் பிந்து அப்பளம் தரலேன்னா சாப்பிட மாட்டோம் என கும்பலாக குட்டீஸ்கள் லூட்டி அடிக்கும் பாடலாக இருக்கட்டும், பெரியவர் சிறியவர் அனைவரும் சுவைக்கும் நிஜாம் பாக்கு பாடலாக இருக்கட்டும, ஆலயா வேஷ்டிகள் விளம்பரத்தில் வரும் வீரா, சூரா பாடலாக இருக்கட்டும், சிந்தால் சோப் விளம்பரத்தில் சென்னையை ஒரு குடும்பம் சுற்றிப்பார்க்கும் போது ஒலிக்கும் பாடல் என இசைக்காகவோ, பாடலுக்காவோ, நடனத்திற்காகவோ, காட்சிப்படுத்தபட்ட விதத்திற்காகவோ சில விளம்பரங்கள் நம் நினைவைவிட்டு நீங்காது.

இன்றும் மளிகைக் கடைக்கு போய் கோல்கேட் கொடுங்க என்று அண்ணாச்சியிடம் கேட்டு ஏதோ ஒரு கம்பெனி பேஸ்ட்டை வாங்கி வருவதும், டால்டா எனக் கேட்டு ஏதோ ஒரு பிராண்ட் வனஸ்பதியை வாங்கி வருவதும் தொடரத்தானே செய்கிறது. அவர்களைப் பொறுத்தவரை டூத் பேஸ்ட் என்றால் கோல்கேட் தான், வனஸ்பதி என்ற பொருளோ சிலருக்கு தெரியாது. அந்தப் பொருளுக்கு பெயரே டால்டா தான்.
ஒரு நிறுவனம் வெற்றி பெறுவது தனது தயாரிப்புகளால் மட்டுமல்ல. அந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் விதத்தில்தான். சந்தைப்படுத்தும் வித்தையை சரியாக செய்யும் நிறுவனங்கள் காலம் கடந்து தன் விளம்பரங்களால் மக்கள் மனதில் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை….
-சுரா