
மார்ட்டின் லூதர்கிங்கின் மிகப் பிரபலமான வாசகம் ஒன்றுண்டு. I Have a dream…
ஆம், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். வாழ்வில் சாதிப்பதில், வெற்றி பெறுவதில், பொருளீட்டுவதில், புகழ் பெறுவதில் என அவரவர் துறை சார்ந்த கனவுகளும், எதிர்காலக் கனவுகளும் நிறைந்து காணப்படும். ஆனால் சிலருக்கோ இச்சமூகத்தின் மீது ஒரு காதல் இருந்து கொண்டே இருக்கும். சேவை செய்து தாங்கள் வாழும் காலத்திலே இச்சமூகத்திற்கு எதாவது செய்து ஒரு அங்குலமாவது உயர்த்தி விட வேண்டும் என எண்ணிக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஓர் அற்புதமான கனவைக் கொண்டிருக்கிறார் ஜே.கே.பவுண்டேசன் நிறுவனர் ஜே. ஜெயகிருஷ்ணன்.

ஏழைகளுக்கு உதவுதல், அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருதல் என பல்வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார் ஜெயகிருஷ்ணன்.
அவரின் தற்போதைய கனவு. மடம் அமைத்தல். இந்த வார்த்தையை கேள்விப்பட்டது போல இருக்கிறதா? பழைய காலங்களில் வழிப்போக்கர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்குமென மடங்கள் இருக்கும். அங்கே இலவசமாக உணவு வழங்கப்படும். தங்கவும் செய்யலாம்.
தற்போது அத்தகைய ஒரு திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முயன்று வருகிறார் ஜே.கே. இன்று சாலைகளில் ஏராளமான மாடுகளும், நாய்களும் திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. மாடுகளுக்கும், நாய்களுக்கும் என தனி காப்பகங்களை ஏற்படுத்த திட்டங்களைத் தீட்டி வருகிறார் இவர். மாடுகளுக்கும், நாய்களுக்கும் இரக்கப்படும் இவர் மனிதர்களை சும்மா விட்டு விடுவாரா என்ன?

ஆதரவற்றவர்களுக்கு என, அதாவது உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு திக்கு, திசை தெரியாமல், கால் போன போக்கில் சுற்றித் திரிந்து, யாரிடமும் உணவு கேட்கவும் கூச்சப்பட்டு திரிபவர்களுக்காக மடம் ஒன்றை உருவாக்க விரும்புகிறார் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெய கிருஷ்ணன்.
இப்படிப்பட்டவர் மடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்வாதாரம் மேலும் செழிக்க அவர்களின் திறமைக்கேற்ப கைத்தொழில் ஒன்றையும் கற்றுத்தரும் திட்டம் வைத்திருக்கிறார் ஜெயகிருஷ்ணன். இது தொடர்பாக அரசுடன் தற்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். விரைவில் அமலுக்கு வரும் பட்சத்தில் யாருமில்லாமல் சுற்றித் திரியும் ஆதரவற்றோர்களுக்கு புதிய உறவுகளும், புதிய நம்பிக்கையும் கிடைக்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை.




