கொரோனா அச்சம் உலகம் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து தலைப்பு செய்திகளாக தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.

டெல்லியில் கொரோனா சிகிச்சை முகாமில் இருந்த சிறுமிக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டிருகிறார்கள்.
பெண்கள், குழந்தைகள் எங்கு, எந்த நிலைமையில் இருந்தாலும் அவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் என்பதை காட்டியிருக்கிறது இந்த செயல். இது டெல்லியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வுதானே என கடந்து சென்று விட முடியாது. இந்த நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை இந்த சம்பவம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

உணவில்லாமல் இருப்பவர்களுக்கு உதவி செய்வது, பசியோடு சாலையில் திரியும் நாய்களுக்கு உணவளிப்பது என பல நல்ல குணங்களை இந்த கொரோனா மீட்டு கொண்டு வந்திந்ருதாலும், பெண்களுக்கு எதிரான வக்கர புத்திகளை மட்டும் இன்னும் மாற்ற முடியவில்லை. இந்த நேரத்தில் தான் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஊரடங்கில் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதே போல், மும்பை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த பெண்ணை கொரோனா நோயாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த ஜூலை 16ம் தேதி 40 வயதான பெண் ஒருவர் நோய் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அனுமதிக்கப்பட்ட அதே குடியிருப்பில் கொரோனா நோயாளி ஒருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே அடிக்கடி உதவி செய்வது போல அந்த நபர் பெண்ணிடம் வந்து பேச்சுக் கொடுத்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பெண் அந்த நோயாளியிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொரோனா நோயாளி, அந்த பெண் தனியாக இருக்கும் நேரத்தில் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பன்வேல் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் தான் ஆபத்தா என்று நினைத்தால் களத்தில் இறங்கி போராடும் பெண்களுக்கும் ஆபத்து சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு கொரோனாவை காட்டிலும் சில ஆண்களால் பெரிய ஆபத்து ஏற்பட்டு வருவதை சமீபத்தில் வெளியான செய்திகள் காட்டுகின்றன.

முன்களப்பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவிக்கு அரசு அதிகாரி தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதே போல், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தினந்தோறும் ஒரு வித பாலியல் சீண்டல்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய கல்லூரி மாணவி ஒருவர், பல அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த அந்த கல்லூரி மாணவி பகுதி நேரமாக ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் , அவர் கொரோனா முன்களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு வீடுவீடாக சென்று மக்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவுகள் உள்ளதா என கேட்டு கணக்கெடுக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வீடு வீடாக சென்று கதவை தட்டும்போது, சில ஆண்களால் பல தொந்தரவுகள் ஏற்பட்டதாக கூறுகிறார், அந்த மாணவி.
வீட்டில் தனியாக இருக்கும் ஆண்கள் அத்துமீறி பேசுவதாக அவர் புகார் தெரிவிக்கின்றார். வீட்டிற்குள் வந்து காபி சாப்பிட்டு செல்லுங்கள் என கூறுவதும், முகக்கவசங்களை கழட்டுங்கள், நீங்கள் அழகாய் இருக்கறீர்களா என பார்க்க வேண்டும் என கேட்பதும், போன் நம்பரை கேட்பதும் என தொடர்ந்து துண்புறுத்தப்படுதாக அவர் வேதனை தெரிவிக்கிறார். இந்த கொரோனா காலத்தில் சமூக சேவைக்காக இறங்கியுள்ள இந்த பெண்களை போற்றாமல் அவர்களிடமே பாலியல் சீண்டல்கள் செய்து என்ன விதமான மனநிலை என்றே தெரியவில்லை.

“கொரோனா ஊரடங்கில் மொத்த தேசமே முடங்கிக்கிடக்கிறது. இப்போதுகூட, பிஞ்சுக் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுல்லாமல், கடந்த ஒரு மாதத்தில், நேரடித் தொலைபேசி மற்றும் காவலன் செயலி மூலம் பெண்கள் பாதிப்பு குறித்த 2,963 புகார்கள் வந்துள்ளதாக தமிழகக் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மணி நேரமும் ஏதே ஒரு மூலையில் ஒரு பெண்ணோ , சிறுமியோ பாலியல் சீண்டலுக்கு ஆளாகி வருகின்றனர். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம் என்பதை காட்டிலும் தனி மனித சுய ஒழுக்கமே பெண்கள் மீதான வக்கரங்களை தடுக்கும்….
-விஜய் பிரபா