Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

தல போல வருமா!!

August 15, 2020

எளிய மனிதர்களின் வெற்றிக்கதை அசாத்தியமானது.ஏராளம் வலி நிறைந்தது! அந்த வகையில் கிரிக்கெட் என்றால் என்ன என்று கூட தெரியாத ஒரு சிறுவன், பின்னாளில் கிரிக்கெட் புத்தகத்தில் கூட இல்லாத ஷாட்களை ஆடி பிரம்மிக்க வைத்தான்.

பல ஜாம்பவான்களால் சாதிக்க முடியாததையும் தனது அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிக்கால் வசப்படுத்திக் காட்டினான். இன்று சர்வதேச கிரிக்கெட் வரலாற்றை அந்த நபரின் பெயரைக் குறிப்பிடாமல் எழுத முடியாது என்னும் அளவிற்கு பலருக்கு ரோல்மாடலாக மாறியுள்ள அவர் வேறு யாருமில்லை ….மகேந்திர சிங் தோனிதான்….

தோனியின் வாக்குமூலத்தைப் பெற ஆணையர் நியமனம்!

மழையால் குவாலிபயர் 2 ரத்தானால் எந்த அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும்?

குவாலிபயருக்கு முன்னேறிய மும்பை!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பான் சிங் – தேவகி தம்பதியினருக்கு 1981-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி பிறந்தார் மகேந்திர சிங் தோனி. இவரை தல தோனி என்று ரசிகர்கள் அழைத்தாலும் நெருங்கிய வட்டாரத்திற்கு அவர் என்றுமே மாஹி தான். டிஏவி ஜவஹர் வித்யாலயாவில் தனது பள்ளிப் படிப்பை தொடங்கிய அவருக்கு கவனமெல்லாம் விளையாட்டின் மீதுதான் இருந்தது. பள்ளி அணியில் பேட்மிண்டன் மற்றும் கால்பந்து வீரராக இணைந்த தோனி, நல்ல கோல் கீப்பராகவும் இருந்தார்.

வாழ்க்கையை மாற்றும் சந்தர்ப்பங்கள் அனைவரது வாழ்விலும் பலமுறை கடந்து செல்வதுண்டு. அதனை யார் சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவர்களை மட்டுமே வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளும். அப்படி தனக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திகொள்ள தோனி தவறியது இல்லை. பள்ளி கால்பந்தாட்ட அணியின் கோல் கீப்பராக இருந்த தோனியை பயிற்சியாளர் கிரிக்கெட் அணிக்கு அழைத்தபோது சற்றும் யோசிக்காமல் ஓகே சொன்னார் தோனி. அந்த சம்மதம் அவருடைய எதிர்காலத்தை மட்டுமல்ல… இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும் மாற்றி அமைத்தது.

கிரிக்கெட் என்றால் என்ன என்று தெரியாத தோனிக்கு, விக்கெட் கீப்பிங் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் கோல் கீப்பிங் அனுபவம் அவருக்கு கை கொடுக்க… எடுத்த எடுப்பிலேயே பள்ளி கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஆகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனை சிறப்பாக பயன்படுத்திய தோனிக்கு பேட்டிங் பயிற்சியும் கொடுத்தார் பானர்ஜி. வழக்கமான கிரிக்கெட் வீரரைப் போல தோனி எந்த ஒரு ஸ்டைலையும் பின்பற்றவில்லை. ஆனால் அவர் அடித்த பந்துகள் மைதானத்திற்கு வெளியே பறந்தன.
பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான போட்டிகளில் தோனி பேட்டுடன் களமிறங்கினலே, பந்துவீச்சாளர்கள் பின்வாங்கத் தொடங்கினர். சென்னை 28 படத்தில் வருவது போல எப்டி போட்டாலும் இவன் அடிக்கிறானே என்னதான் செய்வது என பவுலர்கள் நொந்து கொண்டனர். தோனியின் பேட்டால் முத்தமிடப்பட்ட பந்துகள் மைதானத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதும், இதனால் போட்டிகள் தாமதமாவதும் வாடிக்கையாகிப் போனது.

படிப்பில் சுமாரான தோனிக்கு பீகார் அணியில் வாய்ப்பு கிடைத்ததால் 2001-ம் ஆண்டு அரசாங்க வேலை தேடி வந்தது. குடும்பத்தின் கஷ்டம் தீரப் போகிறது, மகனது எதிர்காலம் பிரகாசமாகப்போகிறது என பெற்றோர்கள் மகிழ்ச்சியடைய, நண்பர்களும் ஆனந்தக் கூத்தாடினார். ஆனால் விக்கெட் கீப்பராக கேட்ச் பிடிக்க வேண்டியவனை இப்படி ரயிலில் டிக்கெட் இல்லாமல் வருபவர்களை பிடிக்க வைத்துவிட்டார்களே என்று விதியை நொந்துகொண்டிருந்தார் தோனி.

எல்லா சிறுவர்களைப் போல தோனிக்கும் கிரிக்கெட் ரோல் மாடல் சச்சின்தான். அவருடன் விளையாட தோனிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மண்டல அளவிலான போட்டியில் கலந்துகொள்ள மறுநாளே அவர் அகர்தலா செல்ல வேண்டியிருந்தது. ராஞ்சியில் இருந்து கொல்கத்தாவிற்கு ஒரே இரவில் எப்படி செல்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்த தோனிக்கு நண்பர்கள் உதவ அவசர அவசரமாக பயணித்தும் விமானத்தை கோட்டைவிட்டார். அப்போது கூட தோனி கலங்கவில்லை. வாழ்க்கை இத்துடன் முடிந்துபோகப் போவதில்லை என்று உறுதியுடன் இருந்தார். ஆனால் வேலைக்கு சென்று விட்டால் கிரிக்கெட்டை தொலைக்க வேண்டி வரும் என்ற பயம் அவரை தூங்கவிடவில்லை.


விரக்தியில் இருந்த தோனிக்கு கரக்பூரில் அறிமுகமானது டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர். அதில் கவனம் செலுத்தத் தொடங்கிய தோனி வழக்கம் போல சிக்சர்களை பறக்கவிட அவரை தங்கள் வசமாக்க பல்வேறு கிளப்புகள் போட்டி போட்டன. ஒரே ஒரு போட்டிக்காக இரண்டாயிரம் ரூபாய் வரை அவருக்கு தர காத்திருந்தனர். தோனியின் இன்றைய 20-20 வெற்றிக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளே.
என்னதான் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடினாலும், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ண மட்டும் தோனியின் மனதைவிட்டு அகலவில்லை.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பணியில் இருந்த தோனி பயணி ஒருவரிடம் அடிக்கடி ஸ்கோர் கேட்டு தொந்தரவு செய்ய கடுப்பான அந்த நபர், ஆமா ஸ்கோர் தெரிஞ்சு இவரு இந்தியாவுக்கு உலகக்கோப்பைய வாங்கித்தர போறாரு என்று சுருக்கென்று கேட்டார். இந்த வார்த்தைகள் தோனி தனது பாதையில் பயணிக்கவில்லை என்று அவருக்கு உணர்த்தியது. கிரிக்கெட் பயிற்சிக்காக விடுப்பெடுக்க ஆரம்பித்தார் தோனி. விளக்கம் கேட்டு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. விளைவு வேலை பறிபோனது. வீட்டிற்கு வந்த தோனியை பெற்றோர் திட்டித் தீர்க்க, தோனியின் மனதோ கிரிக்கெட்டை நினைத்து பாங்க்ரா நடனம் போட்டது.


எதிர்காலம் குறித்த கேள்விக்குறி ஆச்சர்யக்குறியாக மாற, அதிக காலம் பிடிக்கவில்லை. 2004-ம் ஆண்டு செப்டம்பரில், ‘இந்தியா ஏ’ அணியின் விக்கெட் கீப்பராக இருந்த தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் அழைப்புவர, தோனிக்கு அங்கே இடம் கிடைத்தது. ‘ஜிம்பாப்வே 11’ அணியுடனான முதல் போட்டியிலேயே ஒட்டுமொத்தமாக ஏழுகேட்ச், நான்கு ஸ்டம்ப்பிங் என அசத்திய தோனி, அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கில் கலக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனம் இந்த துடிப்பான இளைஞன் பக்கம் திரும்பியது.

2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியில் தோனிக்கு இடம் கிடைத்தது. இதற்கு காரணமானவர் வேறு யாருமில்லை நமது தாதா சவுரவ் கங்குலிதான். ரஞ்சி கோப்பையில் பெங்காலுக்கு எதிரான போட்டியில் பீகார் சார்பாக களமிறங்கிய தோனி ஹெலிகாப்டர் ஷாட்களை விளாச கடுப்பான பவுலர் பந்தை மோசமாக வீசினார். இதனை கவனித்த கங்குலி அந்த இளைஞனிடம் இருந்து உருப்படியாக எதையாவது கற்றுக்கொள் என தனது அணி வீரருக்கு அறிவுரை வழங்கினார். அப்போதே தோனியின் திறமையால் கங்குலி ஈர்க்கப்பட்டிருந்தார்.


கனவு பலித்தது… இனி எல்லாம் நன்றாக நடக்கும் என தோனிக்கு நம்பிக்கை பிறந்தது. 2004-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் களமிறங்கினார் தோனி. அவர் எதிர்பார்த்தது போல அன்றைய தினம் எதுவும் சிறப்பாக நடக்கவில்லை. ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆம் தோனியின் முதல் சர்வதேச போட்டி இப்படிதான் முடிந்தது. அந்தத் தொடரில் அவர் சராசரியாக விளையாடிய போதும் அடுத்து நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக தொடரிலும் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஏப்ரல் 5- 2005 இந்தியா- பாகிஸ்தான் மோதிய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்டார் தோனி. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் கில்லாடியான அவர் இந்த முறையும் அதனை சரியாக செய்தார். 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார். தோனியின் இந்த ருத்ரதாண்டவ ஆட்டம் ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது.


அதே ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி நடந்தது. இதில் 299 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி சச்சின் – சேவாக் என இரு ஜாம்பவான்களின் விக்கெட்டுகளையும் தொடக்கத்திலேயே இழந்தது. மூன்றாவது வீரராக வந்த தோனி, பவுண்டரி சிக்சர் என விளாசினார் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல். 145 பந்துகளில் 183 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற புது சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். இந்த போட்டிக்கு பின்னர் தோனி கொடுத்த பேட்டியை யாராலும் மறக்கவே முடியாது.


அடுத்தடுத்த போட்டிகளிலும் தோனியின் ரன் வேட்டை தொடர 2006-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அவருக்கு முதலிடம் கிடைத்தது. இதற்கிடையில் 2005-ம் ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் தோனி. பாகிஸ்தானில் நடந்த போட்டி ஒன்றில் அவர் 148 ரன்கள் விளாசினார். தோனியின் ஆட்டத்தை பார்த்து வெகுவாக பாராட்டிய அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப், தோனியின் நீண்ட கூந்தல் தம்மை கவர்ந்ததாக தெரிவித்தார். ஜான் ஆப்ரஹாமின் விசிறி என்பதாலேயே தோனி நீண்ட கூந்தலுடன் இருந்ததும், பின்னர் தமது காதல் மனைவி ஷாக்சிக்காக சிகை அலங்காரத்தை மாற்றியதும் நாம் அனைவரும் அறிந்ததே.

2007-ம் ஆண்டு தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடினார் தோனி. இந்தத் தொடர் தோனிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கு அதிர்ச்சியாக அமைந்தது. வங்கதேசத்திடம் தோல்வி, சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை என அடுக்கடுக்கான சறுக்கல்கள். வேதனையுடன் நாடு திரும்பினார் தோனி. ராஞ்சியில் கட்டிக் கொண்டிருந்த வீட்டை ரசிகர்கள் சேதப்படுத்தினர். கலகங்களால் கலங்காத தோனி வெற்றிகளால் மட்டுமே தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தார்.
2007-ம் ஆண்டில் முதன்முறையாக இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனியர் வீரர்கள் ஒதுங்க தோனியை கேப்டனாக நியமிக்க சிபாரிசு செய்தார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்த போட்டியில் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தது. செப்டம்பர் 24-ல் நடந்த இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டது.


கபில்தேவிற்கு பிறகு உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் என தோனியை இந்தியா கொண்டாடியது. 2007-ம் ஆண்டு ஒருநாள் கேப்டன் பதவியும், 2008-ல் டெஸ்ட் கேப்டன் பதவியும் தோனியைத் தேடி வந்தது. 2009-ம் ஆண்டு டிசம்பரில் தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. 2010-ம் ஆண்டில் ஆசியக் கோப்பை இந்தியா வசமானது. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை இந்தியா- இலங்கை – வங்கதேசம் இணைந்து நடத்தியது. இந்த முறையாவது கோப்பையை வசப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணி தட்டுத்தடுமாறி காலிறுதிக்குள் கால் பதித்தது. 2003 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்விக்கு பழி தீர்த்து அரையிறுதியில் பாகிஸ்தானை துவம்சம் செய்தது. மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்த இந்திய அணி கம்பீர், யுவராஜ், தோனியின் நேர்த்தியான ஆட்டத்தால் உலகக் கோப்பையை முத்தமிட்டது. கோப்பையை சச்சினுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்தார் தோனி.

தோனி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன் என்பதைத் தாண்டி தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் உள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. தனது ரோல்மாடலான கில்கிறிஸ்டின் பல்வேறு சாதனைகளை இவர் உடைத்திருக்கிறார். கீப்பிங் கிளவுஸ் உடன் ஸ்டம்புகளுக்கு பின்னால் நிற்கும் தோனியைக் காண்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அலேக்காக இவர் பிடிக்கும் கேட்சுகளும், அசால்டாக செய்யும் ஸ்டம்பிங்கும், துல்லியமான ரன் அவுட்களையும் வர்ணிக்காதவர்களே இருக்க முடியாது.
இந்திய வீரர்களுடனான தோனியின் நட்பும் அவரது வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. குறிப்பாக யுவ்ராஜ் சிங் – தோனி ஜோடி சேர்ந்தால் அது நிச்சயம் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு மோசமான நாளாகதான் அமையும். 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை என இரண்டிலும் இந்த ஜோடி ஆடிய ஆட்டத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மகுடம் சூடியது. இதன் மூலம் ஐசிசி நடத்தும் 3 விதமான தொடர்களிலும் கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற வரலாற்று சாதனையில் தோனியின் பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டது.


ஒருநாள், டெஸ்ட் மட்டுமல்லாது டி20 போட்டிகளிலும் தோனி வெற்றி நாயகனாகவே திகழ்ந்தார். 2008-ல் தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஒப்பந்தம் ஆன தோனி, 8 சீசன்களில் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தினார். இவரது தலைமையில் 2 முறை கோப்பையை வென்ற சி.எஸ்.கே., ஐ.பி.எல். தொடரின் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்தது. சென்னை மக்களின் செல்லப் பிள்ளையானார் தோனி. பிடித்த உணவு சென்னை பிரியாணி, பிடித்த நடிகர் ரஜினி என பக்கா சென்னைவாசியாகவே மாறிய தோனி, தனது இரண்டாவது தாய் வீடு இதுதான் என்று செய்தியாளர் சந்திப்பில் சொல்லத் தவறியதில்லை.

வெற்றி மேல் வெற்றியைக் குவித்த தோனி 2010-ம் ஆண்டு ஜுலை 4-ம் தேதி ஷாக்சியை மணமுடித்தார். இந்த தம்பதிக்கு ZIVA என்ற மகள் உள்ளார். 2015 உலகக்கோப்பை தொடரின் போது இவர் பிறந்தார். தான் நாட்டுக்கான பணியில் உள்ளதாகவும், அதனை முடித்துக்கொண்டே மகளை காண செல்வேன் எனவும் கூறிய தோனியின் கடமை உணர்வை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தோனிக்கு பிடித்த உணவு சிக்கன். திருமணத்திற்கு பிறகு அவர் கலந்துகொண்ட பெரும்பாலான போட்டிகளின் போது சிக்கன் சமைத்துத் தருவதற்காக எலக்ட்ரிக் குக்கருடன் கிளம்பிவிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார் மனைவி ஷாக்சி. சிக்கனைவிட தோனிக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றால் அது பைக். விதவிதமான பைக்குகளில் உலா வருவது என்றால் அவருக்கு கொள்ளை பிரியம்.
சாதனை படைக்கும் அனைவரின் மீதும் விமர்சனங்கள் எழுவது வாடிக்கையான ஒன்றுதான், அந்த வகையில் தோனியின் மீதும் பல்வேறு விமர்சனங்கள எழுந்தன.

ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்குவதாலேயே தோனி வின்னிங் ஷாட் அடித்து மேட்ச் வின்னர் என பெயர் வாங்கிக் கொள்வதாக அவர் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், ஆறாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கியும் தனது சராசரி ரன்விகிதத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் தோனி. குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் தேவைப்படும் சமயத்திலும் சரி, டாப் ஆர்டர் மளமளவென சரிந்துவிட்ட நிலையிலும் சரி, ஆறாவதாக இறங்கும் தோனி, அருமையாக விளையாடி வெற்றி தேடித்தந்த மேட்சுகள் அதிகம். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே தலைசிறந்த கேப்டன், அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என புகழ்மாலைகள் ஒருபுறம் இருக்க இன்னொரு பக்கம் வெளிநாடுகளில் ஆடும் டெஸ்ட் தொடர்களில் தொடர் தோல்விகள் தோனியை வாட்டின. 2014-ம் ஆண்டு டிசம்பரில், தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.


தொடர்ந்து 2015-ல் நடந்த உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி தோவியைத் தழுவியது. வழக்கம்போல் தோல்விக்கு கேப்டன்தான் காரணம் என்ற விமர்சனம் முன்னெழுந்தது. தோனி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் மறைமுகமாக போர்க் கொடிகள் தூக்கப்பட்டன.
இதேபோல் தனது ஓய்வு குறித்து கேள்வி எழுப்பிய வெளிநாட்டு பத்திரிகையாளர் வாயாலேயே தாம் இன்னும் நீண்ட காலம் விளையாட முடியும் என்பதை சொல்ல வைத்து கேப்டன் கூல் என்பதை நிரூபித்துக் காட்டினார் தோனி.


2017-ல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய அவர், ஒரு சராசரி வீரராக அணியில் தொடர விரும்புவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
தோனி கேப்டனான பின்பு மூத்த வீரர்களான சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி என பலரை ஓரம் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தோனி ஒரு சிறந்த கேப்டன் என்றே மூத்த வீரர்கள் இன்றும் புகழாரம் சூட்டி வருகின்றனர். தனது அணி வீரர்களுடன் தோனி கலகலப்பாக இருக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தவறியது இல்லை.


2008 மற்றும் 2009-ம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதை பெற்ற தோனி தொடர்ந்து 7 ஆண்டுகள் ஐசிசி கனவு அணியிலும் இடம் பெற்றார். விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னாவை 2008-ம் ஆண்டு வழங்கி மத்திய் அரசு தோனியை கவுரவித்தது. 2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற அவர், இந்த ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கும் தேர்வாகியுள்ளார். இது தவிர்த்து இந்திய ராணுவத்தில் கவுர லெப்டினண்ட் கர்னல் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பணிக்கு ஒழுங்காக வரவில்லை எனக் கூறி தோனியை நீக்கிய இந்தியன் ரயில்வே மீண்டும் அவருக்கு கவுரவ பதவி வழங்க தயாராயிருந்தது. ஆனால் மதியாதோர் பிளாட்பார்ம் மிதியதே என்ற வாசகத்திற்கு ஏற்ப அந்த பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

உலகின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக ஆகிவிட்ட போதும் கால்பந்து மீதான தோனியின் காதல் தணியவில்லை போலும். அதனால்தான் ஐ.எஸ்.எல். தொடரில் சென்னையின் எஃப்சி அணி உரிமையாளராக உள்ளார் தோனி. தனது மனைவி ஷாக்சி பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இவரது வாழ்க்கை வரலாறு M.S.Dhoni untold story என்ற பெயரில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடு போட்டது.
மகேந்திர சிங் தோனி…. இந்த பெயருக்கு பின்னால் உள்ள சாதனைகளும் சறுக்கல்களும், விமர்சனங்களும், சர்ச்சைகளும் அதிகம். ஆனால் உண்மை ஒன்றே ஒன்றுதான். கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் வரை இந்த நாயகனின் பெயர் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

செங்கோட்டையில் பயன்படுத்தப்பட்ட ட்ரொன் எதிர்ப்பு இயந்திரம்

Next Post

நேனோ அளவிலான LED கண்டுபிடிப்பு

Next Post

நேனோ அளவிலான LED கண்டுபிடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version