வருமானத்திற்கு ஏற்ப குடும்பத்தினை நடத்தி மனநிறைவோடு வாழவும், மனித இனத்தின் மானத்தை காக்க ஆடையை நெசவு செய்யும் நெசவாளர்களுக்கான தினம்தான் ஆகஸ்ட்7. இந்நாளில் அவர்களை சற்று நினைவுகூர்வோம்…

உழைக்கும் பாமரர்கள் அவர்கள் கையால் உழைத்து தரும் நூல் ஆடையே நம் மானத்தை காக்கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் ஆடைகளை நெய்வதில் அவர்களுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. இவர்களுக்காகவே ஒரு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் அது வரவேற்கத்தக்க ஒன்று தானே. ஆம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேதிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. ஏன் இந்நாளில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
தேசிய கைத்தறி தினம் ஏன் இந்நாளில் கொண்டாடப்படுகிறது?
நம் இந்திய நாட்டினை ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலத்தில், உள்நாட்டு பொருட்களின் உற்பத்திக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தான் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி சுதேசி இயக்கம் துவங்கப்பட்டது. அந்நாளிலிருந்து அந்நிய நாட்டு பொருட்களை புறக்கணித்து உள்நாட்டு உற்பத்தியினை வாங்க வேண்டும் என முடிவெடிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்நாளை தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் நாம் கொண்டாடிவருகிறோம். இந்நாளில் நெசவாளர்களின் வாழ்க்கையினை மேம்படுத்த பல்வேறு உதவுகளையும் அரசு அவர்களுக்காக மேற்கொண்டுவருகிறது.
தமிழகத்தில் நெசவாளர்களின் நிலை:
தமிழகத்தில் 1,133 கைத்தறி நெசவாளர் சங்கங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக திண்டுக்கல், சேலம்,திருப்பூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் தான் இவர்கள் அதிகளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஏற்கனவே சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாச்சாரம் மக்களிடையே அதிகளவில் பரவியதன் விளைவே அவர்களின் தொழில் நலிவடைந்து காணப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தான் தற்போது கொரோனா பாதிப்பும் இவர்களை ஆட்டிப்படைத்து வருகிறது. நூல், பாவு கிடைப்பதில் ஏற்பட்ட தடையால் 4 மாதங்களாக முற்றிலும் முடங்கிய நெசவாளர்களின் வாழ்க்கை கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைக்கு வந்துவிட்டது. தற்போது தான் சமீபத்தில் 6 ஆம் கட்ட ஊரடங்கில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளால் கைத்தறி தொழில் சற்று மீளத்துவங்கியுள்ளது.

இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையிலும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் துாய பட்டு, பருத்தி மற்றும் கைத்தறி உற்பத்தி ரகங்களை வாங்கி அணிந்து நம்முடைய நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதோடு தேசிய கைத்தறி தினத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நெசவுத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, 1.03 லட்சம் நெசவாளர்களுக்கு,இரண்டு தவணைகளாக, தலா, 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர்களுக்கான தினமான இந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி மட்டுமில்லாமல் அனைத்து நாட்களிலும் நினைவு கூர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிக்கரம் நீட்டினால் மட்டுமே இந்நாள் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் முழுமையாக நிறைவு பெறும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்…