சாயங்காலம் முதல் ஆரம்பித்து விடுகிறது இந்த சீரியல் சத்தம். ஒரு சேனல் கூட சீரியல் இல்லாமல் வருவதில்லை. அடுத்து என்ன நடக்கபோகிறதோ என்று ஆர்வத்துடன் ஒரு பிரிவு, இதை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற குழப்பத்தோடு ஒரு பிரிவு..நீங்கள் எந்தப் பக்கம்?
சரி, முதலில் டி.வி.தொடர்களைப் பார்ப்பவர்கள் அதில் எதை ரசிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு கதை. 99 சதவீதம் குடும்பக் கதை. அடுத்து என்ன என்ற ஆர்வத்தை வரவழைத்து தினமும் டி.வி முன் உட்கார வைக்கிறது
தெளிவான நல்லவர்கள்/கெட்டவர்கள் என்ற பாகுபாடு – முதல் எபிசொட் முதலே கூறி விடுகிறார்கள் இவர்களெல்லாம் நல்லவர்கள். நல்லவர்களை எப்படியாவது தோற்கடிக்க முயலும் இவர்களெல்லாம் தீயவர்கள் என்று. சுலபமாக நாம் யாரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பது தெரிந்துவிடுகிறது
வசனம்: ஒவ்வொரு முக்கியமான தருணங்களில் வரும் வசனமும் மிகவும் ஆரவாரத்துடன் காண்பிக்கிறார்கள். பின்னணி இசை முதல், கேமரா வைக்கும் விதம் வரை எல்லாருக்கும் தெரிந்து விடுகிறது இது ஏதோ முக்கியமான தருணம் என்று. அதனால் பார்ப்பவரின் ஈடுபாடு அதிகரிக்கிறது. ‘நல்லா சொல்லு அவள’ என்று நாமே கத்தியிருப்போம் டி.வி யைப் பார்த்து.
வாழ்க்கையின் பிரதிபலிப்பு – மாமியார் கொடுமை, நாத்தனார் தொல்லை என்று நாம் நிஜ வாழ்க்கையில் பார்க்கும் குணாதிசயங்களைக் காட்டுகிறார்கள். அதனால் கதையோடு தொடர்பு படுத்திக் கொள்ள சுலபமாகிறது பார்க்கும் மக்களுக்கு.
எல்லாம் சரி, ஆனால் இதையெல்லாம் கேட்காமல் விடுவதா?
கதை – இதைச் சொல்லியே ஆகவேண்டும். இறுதியாகப் பார்த்த 3 தமிழ் சீரியல்கள் நினைத்துப் பாருங்கள். மூன்றுமே வெவ்வேறு கதைக்களம் என்று சொல்வீர்களா? இல்லை தானே? அது தான் பெரிய ஏமாற்றம். ஒரே கதையை வெவ்வேறு பெயர் வைத்து கொஞ்சம் மட்டும் மாற்றி வெளியிட்டால், எவ்வளவு வருடங்கள் இதையே பார்ப்பது?
நல்லவர், கெட்டவர் என்ற வரையறை – வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒருவர் கூட முழுமையாக நல்லவரும் இல்லை, கெட்டவரும் இல்லை. நாடகங்களில் மட்டும் எப்படித்தான் இது சாத்தியம் ஆகிறதோ தெரியவில்லை. சிறு தொல்லை என்றாலும், பெரும் கொடுமை என்றாலும்..எல்லாவற்றிற்கும் புன்முறுவல் செய்ய நம் சீரியல் நாயகிகளுக்கு மட்டுமே தெரியும்.
கேமரா
- எப்போதும் சாதாரணமாக இருக்கும் சீரியல், ஒரு முக்கிய தருணம், அல்லது சற்றே கோவமான வசனம் என்றால் வீறு கொண்டு எழுந்து விடுகிறது.
- கேமரா ஒவ்வொருவரின் முகத்திற்கும் கிளோஸ்-அப் வைத்தே ஆகவேண்டும்.ஒரே ஒரு வரி வசனம் என்றாலும் அதை நான்காகப் பிரித்து 4 முறை அனைவரது முகத்தையும் கேமரா அருகில் காட்டிவிட வேண்டும்.
- பாவம் அந்த கேமராவும் அவர்களது மேக்-அப் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு முகத்தைப் பார்த்து விடுகிறது.
நாடகத் தன்மை: ஒரு அளவு வேண்டாமா. ஒரு நிமிடத்தில் சொல்ல வேண்டிய கருத்தை, நீட்டி, இழுத்து நடுவில் ஒரு விளம்பர இடைவெளி வேறு. தொடர்கதை தான் என்றாலும் தொடர்ந்து கொண்டேவா இருப்பது. ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் குழப்பம் கொண்டு வருவது.
சிறப்பு பகுதி: டப்பிங் செய்யப்பட்ட நாடகங்கள்
மேக் அப் – போதும், நீண்ட ஆரங்களும், பெரிய காதணிகளும். வீட்டில் தானே இருக்கிறீர்கள்.ஏதோ தினமும் ஒரு திருமண விழாவில் இருப்பது போலவே நினைப்பது.
காதல் – நல்ல விஷயம் தான். பார்க்கவும் அழகாக இருக்கிறது. என்றாலும், குடும்பப் பெண்கள், குழந்தைகள் பார்க்கும் வேளையில் வரும் சில காதல் காட்சிகள் எல்லை மீறுகின்றனவா என்று கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையில் வரும் திரைப்படப் பாடலுக்கு சினிமா நடிகர்கள் கூட இவ்வளவு லயித்து முகபாவங்கள் காட்டியிருக்க மாட்டார்கள். என்ன நடிப்பு, ஆடல் பாடல்
சாதாரண காதலே கிடையாதோ தொடர்களில்? அந்த ஆணை வேறு ஒரு பெண் விரும்ப வேண்டும், இல்லையென்றால் அந்தப் பெண்ணை வேறொருவர் விரும்ப வேண்டும். நடுவில் யாரும் வராமல் காதல் கதையே தெரியாதோ இயக்குனர்களுக்கு?
அப்படியே காதல் வெற்றி அடைந்து திருமணம் வரை வந்தாலும் (குறைந்தது ஒரு 200-300 எபிசோடுகள்), இருவரும் சுய நினைவில் இருந்து, நிம்மதியாகத் திருமணம் செய்து கொள்வதில்லை. நடுவில் ஒரு குழப்பம்,சண்டை ஏதாவது வேண்டும். ஆர்வத்தைத் தூண்ட இப்படி வைப்பது ரசிக்கலாம் என்றாலும் ஒவ்வொரு தொடரும் இதையே செய்தால் நாம் எங்கே போவது
திருமணம் ஆன நாயகன்,நாயகி இருவரும் திருமணம் ஆகி நிம்மதியாக 1 நாள் கூட இருந்துவிடக் கூடாது. ஒரு தவறான புரிதலோ, அல்லது குழப்பவாதி கதாபாத்திரமோ, யாரோ யாருக்கோ செய்த சத்தியம் ஏதோ ஒன்று வந்து விடும் பிரிப்பதற்கு. போதுமே இந்த கதை வார்ப்புரு (டெம்ப்லேட்)
நீங்கள் சீரியல் பார்ப்பதுண்டா?எதையாவது விட்டுவிட்டோமா இந்தத் தொகுப்பில்? சொல்லுங்கள், கேட்போம்